தாய் கண் முன் இறந்த இரட்டை குழந்தைகள்... மருத்துவமனைக்கு சாலை வசதி இல்லாததால் நடந்த கொடூரம்
பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறைப்பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சாலை இல்லாததால் தாயின் கண்முன்னே இறந்து போனார்கள்.
பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறைப்பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சாலை இல்லாததால் தாயின் கண்முன்னே இறந்து போனார்கள். மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
Newborn twins die in front of Tribal mother due to "lack of roads" in Palghar Maharastra https://t.co/JlI7UH0tcH #TribalLivesMatter
— Crime Reports India (@AsianDigest) August 17, 2022
வெளியான அதிர்ச்சியூட்டும் புகைபடத்தில், அந்தப் பெண் ஒரு ஸ்ட்ரெச்சரில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காணலாம்.
பிரசவத்திற்குப் பிறகு அப்பெண்ணுக்கு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் வழுக்கும் சரிவுகளைக் கடந்து, குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பெண்ணை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்றுள்ளனர்.
பால்கர் மாவட்டத்தில் உள்ள மொகடா தாலுகாவில் வசிக்கும் வந்தனா புதார் கர்ப்பமாகி ஏழு மாதங்களில் தனது வீட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வலுவிழந்து, முறையான மருத்துவச் சிகிச்சை இல்லாததால் தாயின் கண்முன்னே இறந்து போனார்கள்.
அதிக இரத்தப்போக்கு காரணமாக பெண்ணின் நிலை வேகமாக மோசமடைந்ததால், கயிறு, பெட்ஷீட் மற்றும் மரத்தைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சரை செய்துள்ளனர். அதில்தான், பெண் அழைத்து செல்லப்பட்டுள்ளார். குழந்தைகளை இழந்த தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், ஆபத்தை பொருட்படுத்தாமல் குடும்பத்தார் பெண்ணை மலை சரிவுகளில் தூக்கி சென்றனர்.
தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக், இந்தச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார். "புதாரின் இரட்டை குழந்தைகள் சரியான நேரத்தில் சுகாதாரம் கிடைக்காததால் இறந்தன" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்கின்றன என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே கூறுகையில், "இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாடு சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் போது ஏழைகள் இதுபோன்ற கஷ்டங்களை எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்