அனிருத்துக்கு திருமணம்; காவ்யா மாறனுடன் காதல்?- பேச்சுவார்த்தை நடத்திய ரஜினி!
32 வயதான காவ்யா, அனிருத் உடன் காதல் வயப்பட்டு விட்டதாகவும் இருவரும் திருமணத்தை நோக்கி நகர்வதாகவும் கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் சன் தொலைக்காட்சி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி, கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இளம் வயதிலேயே பிரபலமான செலிபிரிட்டி பட்டியலில் இவரும் ஒருவர். தற்போது 34 வயதாகும் இவரது திருமணம் குறித்த செய்திதான் வைரலாகி வருகிறது.
திருமணத்தை நோக்கி நகரும் காதல்
சன் டிவி உரிமையாளரும் எம்.பி.யுமான கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனை அனிருத் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா. இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 4,000 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. 32 வயதான காவ்யா, அனிருத் உடன் காதல் வயப்பட்டு விட்டதாகவும் இருவரும் திருமணத்தை நோக்கி நகர்வதாகவும் கூறப்படுகிறது.
பலருடன் கிசுகிசு
அனிருத்தைப் பொறுத்தவரை, இதற்கு முன் பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியாவுடன் காதலில் இருந்து வந்ததாகவும் வயது வித்தியாசம் காரணமாக அந்த உறவு நீடிக்கவில்லை என்றும் அவரே தெரிவித்திருந்தார். பின்னர் கீர்த்தி சுரேஷ், ஜோனிடா காந்தி என இவரது காதலிகள் கிசுகிசு பட்டியல் நீண்டு கொண்டே போனது.
இந்த நிலையில் காவ்யா மாறனும் அனிருத்தும் அமெரிக்கா லாஸ் வேகாஸில் அடிக்கடி சந்தித்து வருவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் நோக்கி உறவை நகர்த்தி செல்வதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை
மேலும் இரு குடும்பங்களுக்கும் நெருக்கமான ரஜினிகாந்த், கலாநிதி மாறனிடம் தனது மருமகன் அனிருத்துக்காக பெண் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் காவ்யா மாறன் - அனிருத் தரப்புகளில் இருந்து, இந்த வதந்திகளுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாததால் ஒருவேளை இருக்குமோ என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.























