முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
மருத்துவர் ராமதாசை மரியாதை குறைவாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அன்புமணி ஆவேசம்.
இன்று காலை சென்னை கண்ணகி நகரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை கொடுத்த உள்ளாரே அதற்கு உங்களின் பதில் என்ன என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர், "அவருக்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்." என கூறிவிட்டு சென்றார்.
இதனால் ஆவேசமான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில்,
பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் எங்களது நிறுவனர் மருத்துவர் ராமதாசை மதிக்கின்ற சூழலில் தமிழக முதலமைச்சர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது அந்த பதவிக்கு அழகு கிடையாது. கௌதம் அதானியை முதலமைச்சர் தன்னுடைய இல்லத்தில் வைத்து ரகசியமாக சந்தித்தது ஏன் என மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார் இந்த கேள்வியில் என்ன தவறு உள்ளது?
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களது உரிமை ஆட்சியில் இருப்பவர்கள் பதில் சொல்ல வேண்டியது உங்களது கடமை அதை விட்டுவிட்டு மருத்துவர் அய்யாவை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். ராமதாஸ் இல்லை என்றால் 2006-ல் உங்களுடைய தந்தை முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. மருத்துவர் ராமதாஸ் இல்லை என்றால் இன்றைக்கு உங்கள் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் கிடைத்திருக்காது நாங்கள் போட்ட வழக்கை அன்று இரவே அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக வாபஸ் பெற்றுக் கொண்டோம் அதனால் தான் அவரது உடலை அங்கே அடக்கம் செய்ய முடிந்தது.
86 வயதான ஒரு மூத்த அரசியல்வாதியை இந்தியாவில் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்றுத்தந்த அவரை பார்த்து அவருக்கு வேலை இல்லை என்பது ஆணவப் பேச்சு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய தந்தை கலைஞர் கருணாநிதி எந்த பாடத்தையும் அவர் கற்றுக் கொள்ளவில்லை. "தைலாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு தைலம் வருகிறது" என்று சொன்னவர் கலைஞர்.
தமிழ்நாடு வளம் பெற வேண்டும் தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அறிக்கை கொடுக்கிறோம். நாங்கள் அறிக்கையில் என்ன கேட்டோம் ..? அதானி எதற்காக உங்களை சந்திக்க வந்தார் இது அதிகாரப்பூர்வ சந்திப்பா அல்லது தனிப்பட்ட சந்திப்பா என்பதை விளக்க வேண்டும் என கேட்டு இருந்தோம். வீட்டில் ஏன் அந்த சந்திப்பு நடந்தது?
தமிழ்நாட்டின் மானம் அமெரிக்க நீதிமன்றத்தில் கப்பல் ஏறுகிறது. தமிழ்நாடு ஆந்திரா சத்தீஸ்கர் ஜம்மு காஷ்மீர் ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கையோட்டு வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2250 கோடி ரூபாய் கையூட்டு கொடுக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சர் என் கடமை அதை விட்டுவிட்டு அமைச்சர் பதில் சொல்வார் என்றால் என்ன சொல்வது. அதானி உங்கள் வீட்டில் வைத்து உங்களை சந்தித்ததற்கு அமைச்சர் எப்படி பதில் சொல்வார்? உங்கள் மடியில் கனமில்லை என்றால் நீங்கள் பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள் ஏன் பதற்றம்? அவருக்கு வேலை இல்லை என்றால் என்ன பதில் இது.? முதலமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை...
எனக்கு பதவி வேண்டாம் பொறுப்பு வேண்டாம் சட்டமன்றமோ நாடாளுமன்றமோ செல்ல மாட்டேன் என சமூக சீர்திருத்தவாதியாக மருத்துவர் ராமதாஸ் வாழ்ந்து வருகிறார். அவரை முதலமைச்சர் கொச்சைப்படுத்துகிறார். முதலமைச்சர் இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் எங்களது தொண்டர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது.
எவ்வளவோ நல்ல யோசனைகளை தொடர்ச்சியாக நாங்கள் முன்வைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் இன்று 20, 22 வயது இளைஞர்கள் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற சூழல் உள்ளது .இதுதான் திராவிட மாடல். பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஊழலில் ஊறிப் போய் உள்ளது முன்னேற்றம் எதுவும் இல்லை.
முதலமைச்சர் அவரது தந்தை கலைஞர் கருணாநிதி போல பக்குவமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப கவனமாக பக்குவமாக பேச வேண்டும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அந்த கடமை உங்களுக்கு உள்ளது.
மருத்துவர் ராமதாசை அவமானப்படுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் இது குறைந்தபட்சம் நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.