மேலும் அறிய
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
காவல்நிலையத்தை சூறையாடிய பிராபகரன் மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க போலீஸ் 4 தனிப்படை அமைத்துள்ளது.

சத்திரப்பட்டி காவல்நிலையம்
Source : whats app
மதுரையில் காவல் நிலையத்திற்குள் புகுந்த கொலைக் குற்றவாளி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி காவலரை தாக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
காவல்நிலையத்தில் ஏட்டை அறையில் அடைத்த இளைஞர்கள்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, இரண்டு நபர்கள் காவல் நிலையத்திற்கு புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு காவலர் பால்பாண்டியை தாக்கிவிட்டு, அவரை அங்கிருந்த அறையில் அடைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரையூர் டி.எஸ்.பி., சந்திரசேகர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி அரவிந்தன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்நிலையம் சூறையாடல் - காவலர் மீட்பு
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.குச்சம்பட்டி அருகில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில். சிறையில் இருந்து வெளியே வந்த, வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த போராளி பிரபாகரன் என்ற பிரபாகரன் என்பதும். இவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மது போதையில் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு பால்பாண்டியை அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, அந்த அறையை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார். மேலும் காவல்நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி, சூறையாடியுள்ளார். பின்னர் கூடுதலாக ஆட்கள் வந்துவிடுவார்கள் என தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து நேற்று அதிகாலை காவல்நிலையம் அருகே வந்த நபர்கள் காவலர் பால்பாண்டியை மீட்டுள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது..,” காவல்நிலையத்தை சூறையாடிய பிரபாகரம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் பிராபகரன் அப்பகுதியில் தான் உள்ளாரா, என காவல்துறையினர் விசாரிப்பது வழக்கம். இந்த சூழலில் தன்னை காவல்துறையினர் அடிக்கடி தொந்தரவு செய்வதாக எண்ணி காவல்நிலையத்தில் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பிராபகரன் மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் கைது
இது தொடர்பாக தெரிந்து கொள்ள காவல்நிலையம் நோக்கி புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காவல்நிலையம் சென்ற போது இடைமறித்து கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆகியோர் அவரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தது குறிப்பிடதக்கது.
காவல்நிலையத்தை சூறையாடி, காவலரை இரவு முழுவதும் பூட்டி வைத்துவிட்டு தப்பியோடிய பிராபகரன் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















