Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, அதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து விமானி சொன்ன தகவலின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Ahmedabad Flight Crash: ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, அதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.
கடைசி நொடியில் விமானி சொன்னது என்ன?
அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் ஏற்படுத்திய சோகம் இன்னும் தணிந்தபாடில்லை. அதேநேரம், விபத்திற்கான சரியான காரணம் குறித்தும் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. இந்நிலையில் தான், விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக, கடைசி நொடியில் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய தகவல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, Thrust not achieved", "falling", "Mayday" எனும் வார்த்தைகளை தான் விமானி கடைசியாக உச்சரித்துள்ளார். அதாவது, ”எதிர்பார்த்த உந்துதல் சக்தியை அடையமுடியவில்லை”, ”வீழ்ச்சி”, அவசர காலத்திற்கான “மேடே” குறியீடு ஆகியவற்றை தான் விமானி கடைசியாக உச்சரித்துள்ளார். இந்த நேரத்தில் இருதரப்புக்கும் இடையேயான தொலைதொடர்பும் பலவீனமாகவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜினில் தான் கோளாறா?
விமானம் கீழே விழுந்து நொறுங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு போதிய உந்துசக்தி இல்லாததாலேயே விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவலும், எதிர்பார்த்த உந்துசக்தியை எட்டமுடியவில்லை என்பதையே உணர்த்துகிறது. இதனிடையே, விமானத்தில் வால்பகுதியில் இருந்த பிளாக்பாக்ஸை, சம்பவம் குறித்து விசாரிக்கும் விமான விபத்து புலனாய்வு பணியகம் கைப்பற்றியுள்ளது. இது விமான விபத்திற்கான காரணத்தை துல்லியமாக அறிய இது உதவும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என கூறப்படுகிறது.
போயிங் விமானங்களில் தரப்பரிசோதனை:
சர்வதேச அளவில் பயன்பாட்டிற்கு வந்த 14 ஆண்டுகளில் விபத்துக்குள்ளானதே இல்லை என்ற, போயிங் 787 விமானத்தின் சாதனை பயணம் கடந்த வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 விமானப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் மேம்பட்ட பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசிடமிருந்து கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமத்தல வாங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில், 47 போயிங் விமானங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
274 பேரை பலி வாங்கிய விபத்து:
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டேக்-ஆஃப் ஆன சில விநாடிகளிலேயே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 229 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் எனமொத்தம் 241 பேர் உயிரிழந்தனர். இதுபோக விமானம் ககுடியிருப்பு பகுதியில் விழுந்ததில் அங்கிருந்த 33 பேரும் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 274-ஐ எட்டியுள்ளது. அதிருஷ்டவசமாக ஒரே ஒரு நபர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் தான், இந்திய வரலாற்றில் பதிவான மிக மோசமான விமான விபத்திற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.





















