NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Results Tamil Nadu: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,40,158 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 22 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் 22,76,069 தேர்வர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், 22,09,318 பேர் தேர்வை எழுதினர். இதில், 12,36,531 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக 55.96 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் எப்படி?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,40,158 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், மொத்தம் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி சதவீதம் 56.13 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 1,52,919 பேர் தேர்வை எழுதி இருந்த நிலையில், 89,198 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 58.33 ஆக இருந்தது.
தமிழ் வழியில் எழுத விண்ணப்பித்தோரும் குறைவு
அதேபோல தமிழ் வழியில் தேர்வை எழுத இந்த ஆண்டு 26,580 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆண்டுதோறும் தமிழ் வழியில் எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 36,335 மாணவர்கள், தமிழ் வழியில் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
யார் யார் எவ்வளவு மதிப்பெண்கள்?

தமிழ்நாட்டில் டாப்பர்கள் யார் யார்?
நீட் தேர்வு முடிவுகளில் முதல் 100 இடங்களை, 6 தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பிடித்து உள்ளனர். சூர்ய நாராயணன் என்னும் நெல்லை மாணவர் 99.9987779 பர்சண்டைலுடன், அகில இந்திய அளவில் 27ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மாணவர் அபினீத் நாகராஜ் 99.9974653 பர்சண்டைல் பெற்று தேசிய அளவில் 50ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல மாணவர் புகழேந்தி 61ஆவது இடத்தையும் (99.9972390) மாணவர் ஹ்ருதிக் விஜய ராஜா 63ஆவது இடத்தையும் (99.9971484) பெற்றுள்ளனர். அதேபோல ராகேஷ் என்னும் மாணவர் 78ஆம் இடத்தையும் மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 88ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அடுத்தது என்ன?
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 15% மருத்துவ இடங்கள் தேசிய இட ஒதுக்கீட்டிலும், 85% மருத்துவ இடங்கள் மாநில இடஒதுக்கீட்டிலும் பிரிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற உள்ளது.





















