பள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி
காலனி என்ற பெயருடன் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த நிலையில், ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆக்ஷனில் இறங்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். நேரில் போய், பள்ளி பெயரில் பெயிண்ட் பூசி பெயரை மாற்றிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியின் பெயரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு என்று மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கு சென்றதும் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் இறங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மல்லசமுத்திரம் கிராமத்திற்கே நேரடியாக சென்று பெயிண்ட் பூசி அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்தார். பின்னர் அதற்கான அரசாணையை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார்.
இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் அன்பில் மகேஷ். ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகனை தொலைபேசியில் அழைத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சொல்லி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சருக்கு மக்கள் நன்றியை தெரிவித்தனர்.