Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய தெம்பா பவுமா தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் தலைதூக்கி காணப்படும் நிறவெறிக்கு செருப்படி பதில் அளித்துள்ளார்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியதே ஆகும். கிரிக்கெட் வரலாற்றில் சோக்கர்ஸ் அதாவது தோல்விகளை மட்டுமே பெற்று வந்தவர்களாக பல ஆண்டுகளாக தொடர்ந்து பலரால் கேலி செய்யப்பட்டு வந்த ஒரு அணி தென்னாப்பிரிக்கா.
கறுப்பினத்திற்கு எதிரான நிறவெறி:
இந்த கறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அமைந்தது. குறிப்பாக, இந்த முறை தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தியது தெம்பா பவுமா எனும் கறுப்பின வீரர். உலகிலேயே மிக அதிகளவில் ஆதிக்கத்தை எதிர்கொண்ட ஒரு இனம் கறுப்பினமே ஆகும். இன்றும் பல நாடுகளில் அவர்கள் மீதான ஆதிக்கம் தொடர்கிறது.
தென்னாப்பிரிக்காவிலும் நிறவெறி இப்போதும் காணப்படுகிறது. நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவை 21 ஆண்டுகள் சிறையில் அடைத்ததே அதற்கு சான்று. நிறவெறி பாகுபாடு காரணமாக 1991ம் ஆண்டு வரை அவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது, நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை ஆகும் வரை தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் ஆடவில்லை.
நிடினி அனுபவித்த துயரங்கள்:
அந்தளவு நிறவெறி பிடித்த நாடாக இருந்த தென்னாப்பிரிக்கா அணி சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்த பிறகும் அவர்களது நிறவெறியின் ஆதிக்கம் என்பது குறையவே இல்லை. வெள்ளை இன வீரர்களே அணியில் இடம்பிடித்து வந்த நிலையில் மகாயா நிடினி தான் அந்த அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பின வீரர். அவர் அணியில் அனுபவிக்காத நிற வெறியே இல்லை. அணி பேருந்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடமாட்டார்கள் என்று நிறவெறியால் அவர் ஒரே அணிக்காக ஆடியபோதும் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
பவுமா எதிர்கொண்ட உருவக்கேலி:
பல போராட்டங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பின கேப்டனாக தெம்பா பவுமா நியமிக்கப்பட்டார். அவர் அணிக்குள் வந்தது முதல் கேப்டனானது வரை அவர் அனுபவித்த கேலிகள் எண்ணிலடங்காதவை. மிக கடுமையான உருவக்கேலியை சந்தித்தார்.
வெற்றி கேப்டன்:
ஆனால், டெஸ்ட் தொடரில் தான் கேப்டனாக பொறுப்பெடுத்தது முதலே தென்னாப்பிரிக்காவின் புது சரித்திரத்தை எழுதத் தொடங்கினார். தெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கேப்டனாக ஒரு போட்டியில் கூட தோற்றது இல்லை. இதுவரை தான் கேப்டனாக ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒன்று மட்டும்தான் டிரா. மற்ற 9 போட்டிகளிலும் வெற்றி ஆகும்.
நிறவெறிக்கு செருப்படி:
நிறவெறியின் ஆதிக்கமும், ஏகாதிபத்ய மனமும் கொண்ட இங்கிலாந்து மண்ணின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தெம்பா பவுமா கையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கதாயுதத்தை ஏந்திக்கொண்டு நின்றது ஒட்டுமொத்த உலகில் உள்ள நிறவெறிக்கும் சம்மட்டி அடி அடிக்கும் விதமாக இருந்தது. பாகுபாட்டையும், பிரிவினையையும் களைவதற்காகவே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதிலே ஆதிக்கத்தை காட்டியவர்களுக்கு பாடம் எடுத்துள்ள பவுமாவிற்கு வாழ்த்துகள்.




















