ஹை.. எல்லா சனி, ஞாயிறும் லீவா? காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு, விடுமுறைகள் எப்போது? முழு விவரம்!
பள்ளிக் கல்வித்துறை நாள்காட்டியில் மொத்தம் 210 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஆண்டுதோறும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இதில் பள்ளிகளின் வேலை நாட்கள், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள், விடுமுறை நாட்கள் உட்படபல்வேறு விவரங்கள் அடங்கி இருக்கும். அதன்படி 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
மொத்தம் 210 வேலை நாட்கள்
இதில் மொத்தம் 210 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. தொடர்ந்து காலாண்டு விடுமுறை செப்.27ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5ஆம் தேதி முடிகிறது.
அரையாண்டுத் தேர்வு எப்போது?
அதன்பின் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு டிச.15 முதல் 2ஆம் தேதி வரை நடத்தப்படு உள்ளது. தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை தொடங்குகிறது. ஜனவரி 5ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.

முழு ஆண்டுத் தேர்வு, விடுமுறைகள்
அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்குகின்றன. ஏப்ரல் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் தொடங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 ஆக இருக்கும் என்று பள்ளி நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த நாள்காட்டியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ள பயிற்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம், மனநலப் பயிற்சிக்கான அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
வேறு என்ன கூடுதலாக அறிமுகம்?
அதேபோல மன நலம் மற்றும் வாழ்வியல் திறன் வகுப்பு கால பயிற்சி வகுப்புகளும் உயர் கல்வி வழிகாட்டி பாடத் திட்டமும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.






















