Cannes Festival: "தமிழன்டா எந்நாளும்..' கேன்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி, சட்டையில் கெத்து காட்டிய மத்திய அமைச்சர்..!
மத்திய அமைச்சர் எல்.முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார்.
கேன்ஸ் திரைப்பட விழா:
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 76-வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்கிய நிலையில், வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவில் இந்தியாவில் இருந்து 3 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990 -ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக்பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவின் சிவப்பு கம்பளம் வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ ஆவணப்பட புகழ் திரைப்படத் தயாரிப்பாளா் குனீத் மோங்கா, இந்திய நடிகை மனுஷி சில்லா், இந்திய திரைப்பட நடிகை ஈஷா குப்தா, மணிப்புரி நடிகா் கங்காபம் டோம்பா ஆகியோர் மட்டுமே செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவும் பங்கேற்றுள்ளார்.
சிவப்பு கம்பள வரவேற்பு:
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, "உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் ஜி20 இந்தியா சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க