இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சில பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் வரிசை வடிவிலான இருக்கை முறைக்கு பதிலாக, அரை வட்ட வடிவிலான இருக்கை முறையை அமல்படுத்தி உள்ளன.

கேரள மாநில பள்ளி வகுப்பறைகள் சிலவற்றில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும், பெஞ்ச் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற படத்தின் தாக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான ஏற்றத் தாழ்வுகள்
பொதுவாக பள்ளிகளில், முன் வரிசைகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களும் நடு வரிசைகளில் சுமாராகப் படிக்கும் மாணவர்களும் கடைசி வரிசைகளில் ஒழுங்காய்ப் படிக்காத மாணவர்களும் அமர்வது/ அமர வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வியிலும் மன ரீதியிலும் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் உருவாகின்றன.
இந்த முறைமையையும் இதில் ஏற்படும் சிக்கல்களையும் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்னும் மலையாளப் படம் விரிவாகப் பேசியது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் சம்பவங்கள் நடப்பதாகப் படத்தில் கூறப்பட்டிருந்தது.

நடுவில் ஆசிரியர் நின்று பாடம்
இதற்கான மாற்று வழியாக, கடைசி பெஞ்ச் என்பதே இல்லாத வகையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டு, நடுவில் ஆசிரியர் நின்று பாடம் நடத்தினார். படத்தில் இத்தகைய காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. இந்த படம் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதைப் பார்த்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சில பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் வரிசை வடிவிலான இருக்கை முறைக்கு பதிலாக, அரை வட்ட வடிவிலான இருக்கை முறையை அமல்படுத்தி உள்ளன.
6 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகம்
இதுகுறித்து இயக்குநர் வினேஷ் விஸ்வநாதன் கூறும்போது, ''கேரள மாநிலத்தில் இதுவரை 6 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முன்னெடுப்பு குறித்து டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.






















