‘காங்கிரஸ் கட்சியில் சாதிய வன்மம்?’ செல்வப்பெருந்தகை படத்தை போடாமல் நிகழ்ச்சி..!
’மாணிக்கம் தாகூர் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சி என்றால், அவர் காங்கிரஸ் கட்சி தயவு இன்றி தனித்து போட்டியிட்டு விருதுநகரில் வெற்றி பெற்றுவிட முடியுமா?” என செல்வப்பெருந்தகை தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பவர் செல்வபெருந்தை. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே கட்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், அதையெல்லாம் சமாளித்து, கட்சியின் தலைவராக நீடித்தார் செல்வப்பெருந்தகை. அதை தாங்கிக்கொள்ள முடியாத கோஷ்டியினர் டெல்லிக்கு முகமது கஜினி கணக்காக பல்வேறு தரம் படையெத்தும் அவரை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற முடியவில்லை.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், செல்வப்பெருந்தகையை ஓரங்கட்டும் வேலைகளில் பிற கோஷ்டியினர் மீண்டும் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள் என்று டெல்லிக்கு காங்கிரஸ் தலைமைக்கு பறந்திருக்கிறது தகவல்.
அகில இந்திய தலைவர், கமிட்டித் தலைவர் படம் போடாமல் நிகழ்ச்சி
காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் என்ன கூட்டம் நடத்தினாலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படங்களை போட வேண்டும் என்பது விதி. அதே நேரத்தில் சோனியா, ராகுல் புகைப்படங்களையும் யாரும் தவிர்த்துவிடாமல், அவர்கள்தான் கட்சியின் எதிர்காலம் என்பதால் அனைத்து போஸ்டர்களிலும் அவர்களுடைய முகங்கள் இடம் பெறும்.
ஆனால், விருதுநகரில் நாளை நடைபெறும் காமராஜர் விருது நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை, மல்லிகார்ஜூனா கார்க்கே புகைப்படங்கள் இல்லாமல், அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் புறக்கணித்துள்ளதாகவும், இது செல்வப்பெருந்தகையையும் மல்லிகார்ஜூனா கார்க்கேவையும் மதிக்காமல் செயல்படும் நடவடிக்கை என்று பொங்கியிருக்கிறார்கள் செல்வப்பெருந்தகை தரப்பினர்.
என்ன நிகழ்ச்சி அது ?
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கும் 9ஆம் ஆண்டு காமராஜர் விருதுகள் என்ற பெயரில் நாளை (ஜுலை 15), விருதுநகர் சரஸ்வதி கிராண் மஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் காமராஜர், மாணிக்கம் தாகூர், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஸ் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் படமோ, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படமோ இடம்பெறவில்லை. இதுதான் தற்போது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாணிக்கம் தாகூரின் தனிப்பட்ட நிகழ்ச்சி
இந்நிலையில், இது குறித்து மாணிக்கம் தாகூர் தரப்பில் கேட்டபோது, இது மாணீக்கம் தாகூரே தன்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்வு என்பதால், மற்ற தலைவர்கள் படம் இடம்பெறவில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால், தனிப்பட்ட மாணிக்கம் தாகூர் சுயேட்சையாக நின்றால் விருதுநகரில் வெற்றி பெற்றுவிட முடியுமா ? என்ற குரல்கள் சத்தியமூர்த்திபவனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.





















