Avadi Bus Depot: ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்
ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தியாக, 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அப்பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட உள்ளது. முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையை அடுத்த ஆவடி பேருந்து நிலையம், பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கிய நிலையமாக உள்ளது. இந்த பேருந்து நிலையம் தற்போது 36 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதோடு, விரைவில் மெட்ரோ இணைப்பும் வர உள்ளதால், ஆவடி மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
ஆவடி பேருந்து நிலையம்
ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து, கோயம்பேடு, தாம்பரம், திருவான்மியூர், பூந்தமல்லி, திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையம் மூலம் தினமும் 6 லட்சத்திற்கு அதிகமான பயணிகள் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில், ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து, 55 வழித்தடங்களில் 221 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக, மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவிக்கிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஆவடி ரயில் நிலையமும் உள்ளது. இது, மக்களுக்கு பெரும் வசதியாக உள்ளது. இதோடு, விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் அங்கு வர உள்ளது.
இந்நிலையில், 1.93 ஏக்கரில் அமைந்துள்ள ஆவடி பேருந்து நிலையம், மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பேருந்து, மின்சார ரயில், வரவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் என, இது முக்கிய சந்திப்பாக மாற உள்ள நிலையில், இப்பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.36 கோடியில் 3 தளங்களுடன் நவீனமயமாகும் ஆவடி பேருந்து நிலையம்
மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, அது குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாட அரசு, ஆவடி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஆவடி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மூன்று தளங்களுடன் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாவது தளங்களுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.
தரைத்தளத்தில் 200 பேர் அமரக்கூடிய வகையில் காத்திருப்பு கூடமும், நேரக் காப்பாளர் அலுவலகம் மற்றும் பயணச்சீட்டு மையமும் அமைக்கப்பட உள்ளன. இதோடு, கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. கடைகள் அமைப்பதற்கும் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது.
முதல் தளத்தில், பணியாளர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறை ஆகியவை அமைக்கப்படுகின்றன. 2-வது தளம் 22,000 சதுர அடியுடன் வணிகப் பகுதியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பிரதான கட்டடித்தை தவிர, பேருந்துகளை நிறுத்தி வைக்கும் இடங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 22 பேருந்துகள் நிற்கும் வகையில், 5 பிளாட்ஃபார்ம்கள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர, தாய்மார்கள் பாலூட்டும் அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் மற்றும் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஆவடி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















