Thirumavalavan: எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேச அரசியல் கட்சிகளுக்கு பயம்... திருமாவளவன் ஆதங்கம்
எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேசினால் அந்த சமூகம் இல்லாத மக்களிடம் எதிரான மனநிலையை உண்டாக்கிவிடும் என்ற பயம் அரசியல் கட்சியினரிடம் உண்டு என்று திருமாவளவன் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
எங்களுக்கு நெருக்கடிதான்:
திமுக-வின் கூட்டணியில் நாங்கள் தொடர்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் தொடரக்கூடாது என்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? நாங்கள் வெளியேற வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் தேவையாக இருக்கலாம். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அது தேவையாக உள்ளது. விசிக-வின் அக்கறை உள்ள யாரும் வெளியேறுங்கள் என்று சொன்னது இல்லை.
எந்த கட்சி இருந்தாலும் நாங்கள் நெருக்கடியைச் சந்திக்கிறோம். அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக இருந்தது வன்கொடுமை நடக்கவில்லை என்பது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி இருக்கிறார்கள்? மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
எஸ்சி/ எஸ்டி மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு:
எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு இந்த சமூகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காகத்தான் திமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றால், எந்த கட்சியுடனுமே நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. ஆளுங்கட்சி மட்டுமின்றி எந்த கட்சியுடனும் நாங்கள் உறவு வைக்கவே முடியாது.
அனைத்து கட்சிக்கும் பிரச்சினை:
தலித், பழங்குடியின மக்கள் பிரச்சினை என்பது அனைத்து கட்சியாலும் ஒரே மாதிரி அணுகப்படுகிறதா? என்றால் இல்லை. அவரவர் இடத்தில் இருந்துதான் பார்க்கிறார்கள். அவரவர் அரசியல் பார்வையில் இருந்துதான் பார்க்கிறார்கள். அனைத்து கட்சியினரிடமும் ஒரு பிரச்சினை உள்ளது. எஸ்சி/ எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேசினால் அந்த சமூகம் அல்லாத மக்களிடம் எதிரான உளவியலை உண்டாக்கிவிடும் என்ற பயம் உண்டு. அதற்கு காரணம் அந்த கட்சியின் தலைவர்களோ, முன்னணி பொறுப்பாளர்களோ இல்லை. இந்த சமூகத்தின் யதார்த்த நிலை.
பயம் உள்ளது:
தலித் சமூகத்திற்கான கட்சியுடன் நெருக்கமாக இருப்பது, விசிக என்று இல்லை எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பது நமக்க எதிராக அமைந்துவிடுமோ என்ற பயம் உள்ளது. அதை மெல்ல மெல்ல உடைத்து முக்கிய இடத்திற்கு வருவது கடினமானது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அது புரட்சி.
கொள்கை என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. இரண்டையும் பொருத்திப் பார்க்கும்போது நிறைய முரண்பாடுகள் உள்ளது. சட்டத்தை இயற்றுகிறோம், சட்டத்தை இயற்றும்போது நிறைய சிக்கல்கள் வருகிறது. எஸ்சி/ எஸ்டி பிரச்சினை வந்தா உடேன எஃப்.ஐ.ஆர். போடாத, முடிந்தவரை சமாதானப்படுத்தி அனுப்பு. இல்லாவிட்டால் இரண்டு தரப்பிலும் வழக்கு போடு என்று வாய்மொழி உத்தரவு கொடுக்கிறார்கள். இது தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ளது.
பா.ஜ.க.வுடன் எப்படி இருக்க முடியும்?
சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எப்படி இருக்க முடியும். அவர்கள் சமூக நீதி பற்றி பரவலாக்கனும், எல்லாருக்கும் கொடுக்கனும், பிரிச்சு காெடுக்கனும்ங்கு எண்ணம் இருக்கு. அப்போது ஒப்பிட்டளவில் திமுக-வுடன் இருக்கிறது என்பது வசதியாகும். திமுக-வுடன் விருப்பமில்லாமல் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் அங்குள்ள பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறோம். கூட்டணியையும் கண்டிக்கிறோம், முதலமைச்சரையும் கண்டிக்கிறோம்.
இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? வேங்கைவயல் போராட்டத்திற்காக அதிமுக என்ன செய்தது? அதிமுகவிற்கு தலித் பிரச்சினை ஒரு பிரச்சினை கிடையாதா? வேங்கைவயலுக்காக 3வது நாளாக நானே 5 ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடத்தினேன். முதலமைச்சரிடம் பல முறை வலியுறுத்தினோம். விழிப்புணர்வு கூட்டத்தில் திரும்ப திரும்ப பேசுனோம். அதன் விளைவுதான் சிபிசிஐடி விசாரணைனு சில முன்னேற்றங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.





















