‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!
’தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவை நோக்கிய புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்’

அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பேசிய நிலையில், அதற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து பேசி வந்தனர். இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா கருத்துக்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், இருந்தாலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், தனித்தே அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி வலிமையானதாகவும் ஒற்றுமையுடனும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திமுக மீது இபிஎஸ் விமர்சனம்
திமுக முன்னெடுத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களின் குறைகளை தீர்க்காமல், தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில்ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, குறைகளை நிவர்த்திச் செய்வதாக சொல்லி, பொய் பிரச்சாரத்தில் திமுக இறங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியில் புதிய கட்சியா ?
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் பலமான கூட்டணியை அதிமுக உருவாக்கும் என்றும், தங்களுடைய கூட்டணியில் புதிய கட்சிகள் பல வந்து சேரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனிம வளம் மூலம் அரசு கொள்ளை
கனிம வளம் மூலம் திமுக அரசு அதிகமாக கொள்ளையடித்துக்கொண்டிருப்பதாகவும், கனிம வளத்துறையை வைத்தே அதிக கொள்ளை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக ஆட்சி நிச்சயம் 2026 மீண்டும் வராது என்றும், அதற்காகதான் தொகுதி வாரியாக சென்று மக்களை தான் சந்தித்து வருவதாகவும் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் அமோக வரவேற்பு
தான் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தனக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருவதாகவும் அந்த வரவேற்பே மீண்டும் 2026ல் அதிமுக ஆட்சிக்கு வருவதை பிரதிபலிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.





















