(Source: ECI/ABP News/ABP Majha)
Maha OTT Review: மெகா படமாக அமைந்ததா மஹா? சிம்பு-ஹன்சிகா இணைந்தும் ஜெயித்ததா? இது OTT விமர்சனம்!
ஹன்சிகாவின் 50 வது படத்தில் இன்னொரு நயன்தாராவாக மாற அவர் முயற்சி எடுத்திருக்கிறார். ஆனால் அதில் அவர் ஜெயித்தாரா?
U R Jameel
Hansika Motwani, STR, Srikanth, Manasvi Kottachi
தியேட்டரில் வெளியாகி தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது மஹா. சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீ காந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கும் மஹா, ஏற்கனவே திரையிடப்பட்டாலும், ஓடிடி.,யில் வீட்டில் அமர்ந்து பார்க்கும் போது அது எது மாதிரி விமர்சனத்தை பெற்றது, என்பதை பார்க்கலாம்.
விமான பைலட் சிம்பு, விமான பணிப்பெண் ஹன்சிகா காதல் திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு குழந்தை. விமான விபத்தில் சிம்பு இறந்துவிட, கோவாவில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த ஹன்சிகா, தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இதே நேரத்தில் சென்னையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள். அதே மாதிரி, ஹன்சிகாவின் குழந்தையும் கடத்தப்படுகிறது. பின்னர் கொலை செய்யவும்படுகிறது. குற்றவாளி யார் என்பதை போலீஸ் கண்டறிந்தார்களா? தனக்கு இருந்த ஒரே உறவும் பறிபோன ஹன்சிகா என்ன ஆனார்? என்பது தான் மஹா.
நாம் இப்படி கதை சொல்லும் போது, அதை கேட்க முடிகிறது. ஆனால், இந்த கதையை தான், தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதையாக முடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில், சும்மா சும்மா கேமராவை ஓட விட்டு, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.
ஹன்சிகாவிற்கு நடிக்க வரும் என்பதும் , ஓவர் ஆக்டிங் அதை விட வரும் என்பதும் இதில் தெளிவாக தெரிகிறது. அவர் மட்டும் அப்படி நடத்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் அப்படி தான் நடித்திருக்கிறார்கள். சம்பவத்திற்கு ஒரு சஸ்பென்ஸ், ப்ளாஷ்பேக்கிற்கு ஒரு சஸ்பென்ஸ் என எல்லாத்தையும் சஸ்பென்ஸ் ஆக்க நினைத்து, வரவேற்பு கிடைக்குமா என்கிற சஸ்பென்ஸிற்கும் சிக்கியிருக்கிறது மஹா.
யார் கொலையாளி என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்; அல்லது தெரியப்படுத்திவிட்டார்கள். அப்படியிருக்க, கொலையாளி ஒரு போலீஸ்காரரின் மகன், அதுவும் அந்த கொலையை விசாரிக்கும் டீமில் உள்ளவர் என்பது மாதிரியான உச்சபட்ச கற்பனை, எடுபட்டதா இல்லையா என்பதை பார்ப்பவர்கள் கவனத்திற்கே விட்டுவிடுவோம்.
ஓரிரு சீனில் வந்த சிம்புவை, படம் முழுக்க பயணிக்க வைக்கிறோம் என்பதற்காக, இடையிடையே அவரது காட்சிகளை வைத்து, ஃபில் செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் அது எடுபட்டாலும், பல சஸ்பென்ஸ் காட்சிகளை உடைத்து ஏறிவதும் அந்த காட்சிகள் தான்.
ஒரு 10க்கு 10 ரூமில், மூன்று 14 இன்ச் மானிட்டரை வைத்துக் கொண்டு, அது தான் கண்ட்ரோல் ரூம் என்பதும், அந்த 14 இன்ச் மானிட்டரில், டிஜிபி வந்து அட்வைஸ் கொடுப்பதும், 1980களை மிஞ்சிய கலைப் பணி. இப்படி பல இடங்களில் பட்ஜெட் தெரிந்தாலும், ஹன்சிகாவின் கார், பங்களாவில் பட்ஜெட் தெரியவில்லை.
க்ளைமாக்ஸ் காட்சி, கொஞ்சம் மனதை திடப்படுத்திவிட்டு பார்க்க வேண்டிய காட்சி. சிக்கி இருக்கும் குழந்தையை காப்பற்ற வரும் ஹன்சிகா, அதற்காக தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்து தாக்க வருவதும், அதன் பின் வில்லனிடம் சாவடி வாங்குவதும், ‛இதெல்லாம் தேவையா’ என்பதைப் போல் தான் இருந்தது.
இது ஒரு ஹீரோயின் கதை. எனவே அவருக்கு தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அந்த முக்கியத்துவத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த முடியும் என்பதில் தான் முழு வெற்றியும் இருக்கிறது. அந்த வகையில், நயன்தாரா உடன் போட்டியிட ஹன்சிகாவிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு இது. ஆனால், அதை அவர் சரியான பயன்படுத்தினாரா, இல்லையா என்பதை, பார்க்கும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
View this post on Instagram
இயக்குனர் ஜமில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஜிப்ரான் ரொம்ப மெனக்கெட்டு பின்னணி அமைத்திருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் பரபரப்பாக்க முயற்சிச்சித்திருக்க வேண்டியதில்லை. ஆர்.மதியின் ஒளிபதிவு ஒன்று தான், எனக்கு தெரிந்து ஆறுதல்.
குறைகள் இருக்கு.. ஆனால், அதை கடந்து சில குறைகளை கடந்து வீட்டில் அமர்ந்து பொறுமையாக பார்த்தால் மஹா, மெகா த்ரில்லராக தெரியலாம். அப்புறம் முக்கியமான விசயம், இது ஹன்சிகாவின் 50வது படம்!