SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது போல தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பாண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் புதிய சாம்பியன்கள் உருவாகி வருகின்றனர். அதாவது, பல ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருந்த அணிகள் முதன்முறையாக தங்களது விளையாட்டில் பல தடைகளை கடந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றன.
ஆர்சிபி-யைப் போல அசத்துமா தென்னாப்பிரிக்கா?
குறிப்பாக, கிரிக்கெட்டில் பெரும்பாலான ரசிகர்களின் கண்கள் ஆர்சிபி மீது இருந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் பல வெற்றிகளை ஆர்சிபி அணி இந்த தொடரில் குவித்து இறுதிப்போட்டிக்குச் சென்றனர். இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி கடந்த ஜுன் 3ம் தேதி ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி தங்கள் கைகளில் ஏந்தி அசத்தினர்.
இப்போது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தங்களது கவனத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது திருப்பியுள்ளது. அதற்கு காரணம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியுடன் கிரிக்கெட் உலகில் ராசியில்லாத அணி என்று கருதப்படும் தென்னாப்பிரிக்கா அணி மோதுவதே ஆகும்.

உலக டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப்போட்டி:
கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஸ் டிராபியை மட்டும் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணி அதன்பிறகு இதுவரை ஐசிசி நடத்திய எந்தவொரு சர்வதேச கோப்பையையும் கைப்பற்றியதே இல்லை. இந்தாண்டு முழுவதும் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில், குறிப்பாக ஹோபர்ட் ஹாரிகேன்ஸ், ஆர்சிபி அணிகள் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அவர்களைப் போல தென்னாப்பிரிக்க அணியும் சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி பல முறை தங்களது கைகளில் இருந்த வெற்றியை எதிரணியிடம் தாரை வார்த்தது உண்டு. ஆனால், தெம்பா பவுமா கேப்டன்சிக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் புத்தெழுச்சி பெற்றுள்ளது. அவரது கேப்டன்சியில் இதுவரை 9 போட்டிகளில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் மட்டுமே டிரா செய்துள்ளது. கேப்டனாக தெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.
வரலாறு படைப்பாரா பவுமா?

அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தெம்பா பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை என எந்த கோப்பையையும் இதுவரை வெல்லாத தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் புது வரலாறு படைக்கும். அதுவும் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் தோல்வியை ஆஸ்திரேலியா கண்டதே இல்லை. பலமிகுந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினால் தென்னாப்பிரிக்க அணியின் புகழ் காலத்திற்கும் வரலாறாக மாறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
புரட்சி:
18 ஆண்டுகளில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி, 14 ஆண்டுகளில் முதன்முறையாக பிக்பாஷ் லீக் பட்டம் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ், 51 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தாலியன் கிளப் அணியான போலோக்னா எஃப்.சி., ஐரோப்பிய கால்பந்து அணியான பி.எஸ்.ஜி. முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது என நடப்பாண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்த புரட்சியின் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியும் இணையுமா? என்பதற்கு இந்த டெஸ்ட் முடியும்போது விடை தெரியும்.




















