சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 2 ஆயிரத்து 423 கோடி ரூபாயில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சென்னையில் மிகப்பெரிய பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது குடிநீர் பிரச்சினை. மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக தற்போது தண்ணீர் பற்றாக்குறை பல மடங்கு குறைந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழை காரணமாகவும் தண்ணீர் போதியளவு இருக்கிறது.
2 ஆயிரத்து 423 கோடிக்கு புதிய குடிநீர் திட்டம்:
இருந்தபோதிலும் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கத்தில் குடிநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர் உள்ளிட்ட பல பகுதி மக்கள் ஒரு வார காலத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இணைப்பதன் மூலம் சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 2 ஆயிரத்து 423 கோடி நிதி கோரி ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் கோர மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமாறு அனுப்பியுள்ளனர். ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இன்னும் சில நடைமுறைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மூத்த மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
7 நீர் ஆதாரங்கள் இணைப்பு:
1000 மி.மீட்டர் முதல் 1800 மி.மீட்டர் வரை அகலம் கொண்ட குழாய்கள் மூலம் இந்த நீர் ஆதாரங்கள் இணைக்கப்பட உள்ளது. இதன்படி, கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம், வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்குன்றம் ஏரி, மீஞ்சூர் சுத்திகரிப்பு நிலைய நீர், கண்ணன்கோட்டை தோர்வாய் கண்டிகை மற்றும் சோழவரம் ஏரி ஆகியவை இணைக்கப்பட உள்ளது. இந்த 7 நீர் ஆதாரங்களை இணைப்பதன் மூலம் சென்னை நகரம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிறப்பு இதுதான்:
பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள் மூலம் இந்த நீர் ஆதாரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் மோட்டார் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சிறப்பு என்னவென்றால், ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்பட்டாலும், மற்றொரு நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படும். அதாவது, ஒருவேளை மீஞ்சூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தோ அல்லது செங்குன்றம் ஏரியில் இருந்தோ அதே பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.
தினசரி 10 லட்சம் லிட்டர்:
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 1086.95 மெகா லிட்டர் தினசரி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். 1 மெகா லிட்டர் என்றால் 10 லட்சம் லிட்டர் என்று அர்த்தம். இந்த குழாய்கள் மொத்தம் 93.26 கி.மீட்டருக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் தொடங்கப்பட்டால் 30 மாதத்தில் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும். இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு சென்னையில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.





















