பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்த அணி ஆர்சிபி என்று வர்ணனையாளர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உள்பட கிரிக்கெட் தொடர்கள் ஒளிபரப்பாகும்போது தமிழில் வர்ணனை செய்பவர்களில் தவிர்க்க முடியாத நபராக இருப்பவர் பத்ரிநாத். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்காக ஆடியுள்ளார்.
ஆர்சிபி தான் எனக்கு பிடிச்ச அணி:
இவரிடம் ஒரு நேர்காணலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக உங்களுக்கு பிடித்த அணி எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் ஆர்சிபி என்று கூறுவார். ஏன்? என்று கேள்வியை தொகுப்பாளர் கேட்கும்போது நான் ஆடிய இரண்டாவது அணி. விளையாடவில்லை அந்த அணியில் இடம்பெற்றேன் என்று கூறுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பத்ரிநாத்தை வறுத்தெடுக்கும் ஆர்சிபி ரசிகர்கள்:
ஆர்சிபி ரசிகர்களுக்கும் பத்ரிநாத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்றே கூற வேண்டும். ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளின்போது தமிழ் வர்ணனையில் இருக்கும்போது பத்ரிநாத் ஆர்சிபி அணியின் மீது வைக்கும் விமர்சனங்கள் பலவும் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.
மேலும், ஒரு முறை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை அணிக்கு எதிராக மிகவும் எளிதான அணி எது? என்று கேட்கப்பட்டபோது சிஎஸ்கே-விற்கு எப்போதும் மிகவும் எளிதான அணி ஆர்சிபிதான். ஆர்சிபி-யை பல முறை பொளந்துருக்காங்க என்று சொல்வார். மேலும், 18வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு இந்த தொடரை வெல்லும் அணிகளில் அவர் கணித்த அணிகளிலும் ஆர்சிபி இடம்பெறவில்லை. மற்றொரு நேர்காணல் ஒன்றில் சில அணிகளை பார்த்தால் பத்திகிட்டு எரியும் என்றும் கூறியிருப்பார். அந்த அணி ஆர்சிபி என்று ரசிகர்கள் சிலர் கூறியிருப்பார்கள்.
முன்னாள் சிஎஸ்கே வீரர்:
இதன்காரணமாக, ஆர்சிபி ரசிகர்கள் அதிகளவில் விமர்சிக்கும் ஒரு நபராக பத்ரிநாத் இருக்கிறார். ஆனால், அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்த அணி ஆர்சிபி என்று கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான பத்ரிநாத் இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகியுள்ளார். 95 போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1441 ரன்கள் எடுத்துள்ளார். 11 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்துள்ளார்.




















