தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules
நகை மதிப்பில் அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை கடனாக வழங்க, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடன்பெறும் தொகை அடிப்படையில் நகையின் மதிப்பு சதவிகிதத்தை கணக்கில் கொள்ள, ரிசர்வ் வங்கி வலியுறுத்த்தியுள்ளது.
அண்மையில் தங்க நகை கடன்களுக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, புதிய விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அந்த விதிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதைதொடர்ந்து தான், தற்போது நகை கடன்களை ஊக்குவிக்கும் விதமாக, நகை மதிப்பு அடிப்படையிலான கடன் வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது.
நகைகளின் மதிப்பிற்கு ஈடான கடன் வரம்பை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரம் மாதம் வெளியான வரைவு விதிமுறைகளில் முன்மொழியப்பட்டு இருந்த 75 சதவிகிதத்தை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகமாகும். ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே, தங்கத்தின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நடுத்தர மக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க, கூட்டுறவு வங்கிகளை நாடும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அதிகளவில் பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.
ஆர்பிஐ அறிவிப்பின்படி, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, நகையின் மதிப்பில் 80 சதவிகிதம் வரையிலும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் வரையிலும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கடன் வழங்கல் அதிகரிக்கும், கடன் வாங்குபவர்கள் அதிகரிக்கலாம் மற்றும் தங்க நிதியாளர்களின் வருவாய் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ரூ.1 லட்ம் மதிப்பிலான தங்க நகை அடகு வைக்கப்பட்டால், இதுவரை 75 ஆயிரம் மட்டுமே நிதியுதவி கிடைத்தது. ஆனால், இனி அந்த நிதியுதவி 85 ஆயிரமாக இருக்கும்.
நகைக் கடனில் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு மட்டுமே விரிவான கடன் மதிப்பீடு தேவைப்படும். அதேநேரம் வணிகம், விவசாயம் அல்லது உற்பத்தி சொத்துகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு அத்தகைய ஆய்வு தேவையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. தற்போதைய சூழலில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே, நகை மதிப்பில் 75 சதவிகிதம் கடன் என்ற விதிமுறை பின்பற்றி வருகின்றன. அதேநேரம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88 சதவிகிதம் அளவிற்கு கடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றிற்கு கூடுதல் வட்டியை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.





















