வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க.வினர் முருகன் மாநாடு மூலம் தமி்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தனது மெகா கூட்டணியுடன், நாட்டை ஆளும் பா.ஜ.க. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமையின் கீழ் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.
முருகன் மாநாடு:
இந்த நிலையில், இன்று மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய அமித்ஷா வரும் 22ம் தேதி நடக்கும் முருகன் மாநாட்டில் இந்துக்கள் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும் என்று பேசினார். பா.ஜ.க. தொடங்கப்பட்டது முதலே தங்களை இந்துக்களின் பிரதிநிதியாகவே பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
வட இந்தியாவில் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை பா.ஜ.க. ஏற்படுத்தியது. இந்த தாக்கத்தின் எதிரொலி பலவிதமாக இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அதன் காரணமாக அரசியலிலும் பாஜக அடைந்த பலன்கள் ஏராளம் என்றே கூறலாம்.
முருகனை கையில் எடுத்த பா.ஜ.க:
தமிழ்நாடு என்பது பா.ஜ.க.விற்கு பன்னெடுங்காலமாக மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. சமீபகாலமாகவே பா.ஜ.க.வின் கொடி தமிழ்நாட்டிலும் பறக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திமுக அரசுக்கு எதிராக பாஜக சமீபத்தில் கையில் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகனை எடுத்துள்ளனர்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க. முருக மாநாட்டை நடத்தி இந்துக்களின் வாக்குகளை கவர்வதற்கு மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டை மதுரையில் நடத்துகின்றனர். ஏனென்றால், சமீபத்தில் மதுரையில் உள்ள உலகப்புகழ்பெற்ற முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலை விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் இந்து - முஸ்லீம் மோதல் ஏற்படும் அபாயம் எடுத்ததையடுத்து, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.
சிக்கந்தர் மலை விவகாரம்:
இந்த நிலையில், தற்போது மீண்டும் முருகன் மாநாடு நடத்தி அந்த மாநாட்டில் சிக்கந்தர் மலை விவகாரத்தை மீண்டும் பெரிதுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏனென்றால், மதுரையில் இன்று பேசிய அமித்ஷா திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று திமுக கூறுகிறது என்று குறிப்பிட்டு பேசினார். இந்த சூழலில் 22ம் தேதி நடத்தப்படும் முருகன் மாநாட்டில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி பாஜக பரப்புரை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு உள்ளது.
வட இந்தியாவில் ராமர் விவகாரத்தை கையில் எடுத்து மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற்ற பாஜக, தற்போது தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுத்து அரசியல் பயன் அடைய திட்டமிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலே பா.ஜ.க.வின் இந்த வியூகத்திற்கு பலன் கிட்டியதா? இல்லையா? என்பதற்கு விடை தரும்.





















