AUS vs SA WTC Final: ஃபயராக பந்துவீசும் தென்னாப்பிரிக்கா.. அடுத்தடுத்து விக்கெட்டுகள் காலி.. ஆஸ்திரேலியாவை காப்பாற்றப்போவது யாரு?
AUS vs SA WTC 2025 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தடுமாறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஃபயராக பந்துவீசும் தென்னாப்பிரிக்கா:
அவரது முடிவுக்கு போட்டி தொடங்கியதுமே பலன் கிடைத்தது. ரபாடாவும், ஜான்செனும் அனலாக பந்துவீசினார். இவர்கள் வேகத்தில் ஆட்டத்தை தொடங்கிய கவாஜா - லபுஷேனே ஜோடி ரன்கள் எடுக்கத் தடுமாறியது. குறிப்பாக, கவாஜா மிகவும் திணறினார். அவர் 20 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ரபாடா பந்தில் பெட்டிங்காமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பறிபோன விக்கெட்டுகள்:
அவர் ஆட்டமிழந்த பிறகு கேமரூன் கிரீன் களமிறங்கினார். கிரீன் வந்தவுடன் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், அவரையும் ரபாடா தனது வேகத்தில் காலி செய்தார். ரபாடாவின் வேகத்தில் 3 பந்தில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து கிரீன் அவுட்டானார். 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு லபுஷேனே - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர்.
உலகின் ஆபத்தான டெஸ்ட் பேட்டிங் ஜோடியாக கருதப்படுபவர்களில் லபுஷேனேவும் - ஸ்டீவ் ஸ்மித்தும் முதன்மையானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் களத்தில் நங்கூரமிட்டு ஆட்டத்தை முழுமையாக ஆஸ்திரேலியா பக்கம் கொண்டு செல்வதில் கில்லாடிகள். மைதானம் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகமாக இருந்ததால் தொடக்கத்தில் இந்த ஜோடி ரன்கள் எடுக்கத் தடுமாறினர்.
லபுஷேனே காலி:
இருப்பினும் தங்கள் அனுபவத்தால் இவர்கள் இருவரும் தற்போது களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஆனாலும், பவுமா ரபாடா, ஜான்சென், நிகிடி, முல்டர் ஆகியோருக்கு மாறி, மாறி பந்துவீச்சை அளித்தார். முல்டர் பந்தில் ரன் எடுக்க ஆஸ்திரேலியா தடுமாறியது. பவுமாவின் பந்துவீச்சு வியூகத்திற்கு நல்ல பலன் கிடைத்தது.
தொடக்க வீரர் லபுஷேனேவை ஜான்சென் தனது பந்துவீச்சால் அவுட்டாக்கினார். அவரது பந்தில் விக்கெட் கீப்பர் வெர்ரெய்னிடம் கேட்ச் கொடுத்து லபுஷேனே 56 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். தற்போது ஆஸ்திரேலிய அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியாவை காப்பாற்றப்போவது யார்?
அந்த அணிக்காக ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். இருவரும் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் என்பதால் இந்த ஜோடி களத்தில் நங்கூரமிட்டால் தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலாக மாறிவிடும். அதேசமயம், இந்த ஜோடியைப் பிரித்து பின்வரிசையில் உள்ள வீரர்களையும் அவுட்டாக்கினால் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருட்டலாம்.
இப்போதே 3 விக்கெட்டுகள் விழுந்துள்ள நிலையில், களத்தில் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஆடி வரும் நிலையில் வெளியில் வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய வீரர்களின் பேட்டிங்கைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன்கள் சவாலாகவோ அல்லது சாதகமாகவோ தென்னாப்பிரிக்காவிற்கு அமைய உள்ளது.
இந்த மைதானம் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் ரபாடா முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி இந்த மைதானத்தில் இறங்கியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளராக கேசவ் மகாராஜ் மட்டுமே களமிறங்கியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தவிர எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்க முழுவீச்சில் ஆடி வருகின்றனர்.
ப்ளேயிங் லெவன்:
தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரிக்கெல்டன், ஸ்டப்ஸ், கேப்டன் பவுமா, டேவிட் பெட்டிங்கம், விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன், முல்டர், ஜான்சென், கேசவ் மகாராஜ், ரபாடா, நிகிடி களமிறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் கவாஜா, லபுஷேனே, கிரீன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.



















