பரியேறும் பெருமாள் படத்துல ஹீரோவா நடிக்க வேண்டியது இவரா? மாரி செல்வராஜ் தந்த ஷாக்
பரியேறும் பெருமாள் படத்தின் கதாநாயகனாக நடிக்க முதலில் அணுகியது அதர்வாவையே என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த மாரிசெல்வராஜ் கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் மூலம் முன்னணி இயக்குனராக உருவெடுத்த அவர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பரியேறும் பெருமாள்:
பரியேறும் பெருமாள் கதை முதலில் சொன்ன ஹீரோ அவருதான் (அதர்வா). பரதேசி படம் பாத்துட்டு பரியேறும் பெருமாள் கதை எழுதி முடிச்சுட்டு யாருகிட்ட போலாம் ஹீரோனு யோசிச்சுகிட்டு இருந்தேன். நான் முரளி சாரோட பெரிய ஃபேன். நமக்காக இதயமே இதயமேனு அழுத ஒரு ஜீவன்.
அவரோட பையன் ஹீரோ ஆகிட்டாருன உடனே, பாணா காத்தாடி படம் வந்த பிறகு பரியேறும் பெருமாள் கதையில நான் மனசுல வச்சு எழுதுன ஹீரோ நீங்கதான். முரளி சார் பையன், நம்மல மாதிரிதான் இருப்பாரு. நம்ம கதைக்கு ஏத்த மாதிரி இருப்பாரு.
பயங்கர அப்செட்:
சந்திச்சேன். கதை சொன்னேன். அவரோட பிசியான ஸ்கெட்யூல்ல அது கிளிக் ஆகல. சொன்னா நம்ப மாட்டீங்க ரொம்ப ஃபீல் பண்ணேன். முரளி சார் பையனே ஒத்துக்கல. யாரு வச்சுதான் படம் பண்றது? வேற ஹீரோவை வச்சு போயிடலமா? முரளி சார் பையனே ஒத்துக்கல இந்த கதைய.
இப்பவே இப்படி இருக்கோம். அப்போ ரொம்ப மோசமா இருப்போம். அவரே நம்மளை இயக்குனரை நம்பல. இனி யாரு நம்ப போறாங்க? அப்படினு பயங்கர அப்செட். என் மனைவிகிட்ட எல்லாம் சொல்லிருக்கேன்.
முக்கியமான படம்:
பரியேறும் பெருமாள் அதர்வாதான் ஹீரோ. அது நடக்கல. ஆனா, எனக்குத் தெரியும். ஒருநாள் அவருகிட்ட ஞாபகப்படுத்தி சொல்லுவேன். அதுக்கான சந்திப்பே நடக்கல. பக்கத்துல, பக்கத்துல உக்காந்து எமோஷனலானா சந்திப்பு இன்னைக்குத்தான் நடந்தது.
நிச்சயமா அவரு இன்னும் உயரம்போகக்கூடிய நடிகர்தான். உயரமா இருக்கதாலேயே அவர் மெதுவாக போகிறாரா? என்று தெரியவில்லை. அவருக்கு திறமை, ஆற்றல், வேகம் எல்லாமே இருக்கிறது. நிச்சயமா இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றம் தந்த பரியேறும் பெருமாள்:
மாரி செல்வராஜ் முதன்முதலில் இயக்கிய படம் பரியேறும் பெருமாள். தென் தமிழகத்தில் நடந்து வரும் சாதிய தீண்டாமை, சாதிய அடக்குமுறையை மிக யதார்த்தமாக காட்டிய திரைப்படமாக பரியேறும் பெருமாள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. கதிர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருப்பார். இவர்களுடன் யோகிபாபு, மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
காத்திருக்கும் அதர்வா:
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களாலும் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அதர்வா தவறவிட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பாணா காத்தாடி படம் மூலமாக நடிகராக அறிமுகமான அதர்வா அதன்பின்பு பல படங்களில் நடித்தாலும் பரதேசி படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், அதன்பின்பு அவர் பல படங்களில் நடித்தாலும் அதர்வாவிற்கு திருப்புமுனை தரும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை.





















