ஆத்தாடி… ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளமா? அண்ணா பல்கலை. மாணவிகளுக்கு அள்ளிக்கொடுத்த ஜப்பான்!
திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ( University College of Engineering) 2025ஆம் ஆண்டு பட்டம் பெறும் 10 மாணவிகளுக்கு, உயர் சம்பளத்துடன் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது.

திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 10 பேர் ஜப்பான் நிறுவனம் ஒன்றில் ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வாகி உள்ளனர்.
கல்விதான் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கிறது. தலைசிறந்த கற்றலும், அதைத் திறமையாக மாற்றி, வளாக நேர்காணலில் சர்வதேச அளவிலான வேலைக்குத் தேர்வாவதும் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்தகட்ட நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.
உயர் சம்பளத்துடன் ஜப்பான் செல்லும் வாய்ப்பு
அந்த வகையில், திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ( University College of Engineering) 2025ஆம் ஆண்டு பட்டம் பெறும் 10 மாணவிகளுக்கு, உயர் சம்பளத்துடன் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது. ஜப்பானில் உள்ள ThirdWave Group என்னும் நிறுவனம், மாதத்துக்கு சுமார் 1.5 லட்சம் சம்பளத்தில் மாணவிகளை வேலைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறும்போது, ’’எம்சிஏ, பி.இ. கணினி அறிவியல், பி.டெக். ஆகிய படிப்புகளைச் சேர்ந்த மாணவிகள், ஜப்பான் நிறுவனத்துக்குச் செல்லத் தேர்வாகி உள்ளனர். UCE- BIT வளாக நேர்காணல் மையத்தின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
கடின உழைப்பின் காரணமாகவே
மாணவிகள் தங்களின் கடின உழைப்பின் காரணமாகவே, இந்த நிலையை அடைந்தகாக டீன் செந்தில் குமார் பாராட்டினார். அப்போது வளாக நேர்காணல் ஒருங்கிணைப்பாளர்கள் திருநீல கண்டன், சித்ரா, வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்’’ என்று பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






















