BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
மதுரை வந்திருக்கும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு, தெற்கை குறி வைத்து ஒரு பெரும் திட்டத்தோடு தான் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், மிக முக்கிய நகர்வாக, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன் பின்னணியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பல திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன திட்டம்.? பார்க்கலாம்.
மதுரை வந்த அமித் ஷா-விற்கு உற்சாக வரவேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(08.06.25) மற்றும் நாளை என 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். முதலில் நேராக மதுரை சென்ற அவருக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து, பிற்பகலில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமித் ஷா, கட்சியினருக்கு பலவேறு ஆலோசனைகளை வழங்குகிறார். அதன் பின்னர், மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
கூட்டணியை பலப்படுத்த திட்டம்
2026-ல் தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் கவனம் செலுத்திவரும் அமித் ஷா, தமிழகத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தோடு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தேர்தலை சந்திக்க அக்கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என பாஜக மேலிடம் கருதுவதால், பிரிந்து இருக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்க அமித் ஷா முயற்சிகள் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
அதோடு, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை எல்லாம் அமித் ஷா நேரடியாகவே கவனித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தென் மாவட்டங்களை குறி வைக்கும் பாஜக
கடந்த 2024-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், தென் மாவட்டங்களில் பாஜகவிற்கு கனிசமான அளவில் வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகளில், பாஜக கூட்டணி 2-ம் இடத்தை பிடித்தது.
இதனால், அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் அந்த செல்வாக்கை வெற்றியாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அதிமுகவும் கூட்டணியில் உள்ளதால், அது சுலபமாகும் என்பது பாஜக-வின் கணிப்பு.
இதற்காக, கூட்டணி கட்சியினரையும் அமித் ஷா சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரையும் அமித் ஷா சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக-விற்கு எதிராக பிரசார பிளான்
தமிழ்நாடு வந்த அமித் ஷா வெறும் கையோடு வரவில்லை. திமுகவிற்கு எதிரான அனைத்து தகவல்களுடனும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, பல்வேறு அமைப்புகளை வைத்து திரட்டப்பட்ட தகவல்களும் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.
இந்த தரவுகளோடு தான், பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை வைத்து, திமுகவிற்கு எதிராக எந்த வகையில் பிரசாரம் செய்யலாம் என நிர்வாகிகளுக்கு அமித் ஷா ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.
இதனால், தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தொடர்பான பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















