AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபாடாவின் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து பலமிகுந்த தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது. மைதானம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரபாடா, ஜான்சென், நிகிடி, முல்டர் ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார். அவரது முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது.
ஆட்டத்தை ஆஸ்திரேலிய தொடக்க வீரர் கவாஜா - லபுஷேனே தொடங்கினர். ரபாடாவும், ஜான்செனும் வேகத்தில் மிரட்ட கவாஜா பந்துகளை தொட முடியாமல் திணறினார். இதனால், ரபாடா வேகத்திலே அவர் 20 பந்துகளில் ரன் ஏதும் எடுக்க முடியாமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த உடன் களமிறங்கிய கிரீன் பவுண்டரி விளாசினாலும் அதே ஓவரில் ரபாடா வேகத்தில் 4 ரன்னில் அவுட்டானார்.
ஸ்மித் அபாரம்:
அடுத்து வந்த ஸ்மித்துடன் லபுஷேனே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கத்தில் நிதானமாக ஆட ஸ்டீவ் ஸ்மித் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். லபுஷேனே களத்தில் நங்கூரமிட முயற்சிக்க, ஜான்சென் அவரை பெவிலியனுக்கு அனுப்பினார். அவரது வேகத்தில் 56 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த லபுஷேனே அவுட்டானார். இதையடுத்து, ஸ்மித்துடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார்.
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் அபாரமாக ஆடிய ஹெட் இந்த போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரையும் ஜான்சென் காலி செய்தார். அவரது வேகத்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த டிராவிஸ் ஹெட் அவுட்டானார். 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியாவிற்கு தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது.
ட்விஸ்ட் தந்த மார்க்ரம்:
கேப்டன் பவுமா தனது பந்துவீச்சாளர்களான ரபாடா, ஜான்சென், நிகிடி, முல்டர் ஆகியோரை மாறி, மாறி பயன்படுத்தி நெருக்கடி தந்தார். ஸ்மித்துடன் வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடியது. ஸ்மித் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாச, வெப்ஸ்டர் ஒருநாள் போட்டியி்ல் போல ஆடினார்.
இந்த ஜோடி அணியை மெல்ல மெல்ல மீட்கத் தொடங்கினார். அபாரமாக ஆடிய ஸ்மித் அரைசதம் கடந்தார். வேகப்பந்துவீச்சில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் கேப்டன் ரபாடா சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். மகாராஜுடன் இணைந்து பேட்ஸ்மேன் மார்க்ரமை பயன்படுத்தினர்.
வெப்ஸ்டர் அபாரம்:
மார்க்ரம் சுழலில் தென்னாப்பிரிக்காவை அச்சுறுத்திய ஸ்மித் அவுட்டானார். அவர் 112 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், மறுமுனையில் வெப்ஸ்டர் அதிரடி காட்டினார். அவர் ஒருநாள் போட்டி போல ஆட அவருக்கு அலெக்ஸ் கேரியும் ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 31 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்த ஓவரிலே ரபாடா வேகத்தில் கேப்டன் கம்மின்ஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
212 ரன்களுக்கு ஆல் அவுட்:
மறுமுனையில் அபாரமாக ஆடிய வெப்ஸ்டர் ஆஸ்திரேலியாவை 200 ரன்களை கடக்க வைத்தார். அவர் 92 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வேகத்தில் அவுட்டானார். கடைசியில் ஆஸ்திரேலியா 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரபாடா அபாரமாக பந்துவீசி 15.4 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், மகாராஜ், மார்க்ரம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.




















