’பள்ளியில் பிரம்பு, போலீஸ் ஸ்டேஷனில் லத்தி’ ஜெய்பீம் சொன்ன வன்முறையின் கோர முகம்..!
'திருத்தத்தான் அடித்தேன் என்று சொல்லும் ஆசிரியரும் சரி, கண்டிக்கவே அடித்தேன் என்று சொல்லும் போலிசிஸும் சரி பிரம்பை பள்ளியிலும், லத்தியை ஸ்டேஷனிலும் விட்டுட்டுத் தான் வீடு திரும்புகிறார்கள்’
ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி பொதுமக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக ஊடகங்கள் எங்கிலும் 2, 3 நாட்களாக அதே பேச்சுதான். படம் இத்துணைக்கும் சம்பிரதாயமான முறையில் எப்போதும் போல பண்டிகையை ஒட்டி தியேட்டர்களில் வெளியாகவில்லை. இருந்தும், ஓயாத அதிர்வுகள் எல்லாத் திசையில் இருந்தும் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.
இந்தக் கவனக் குவிப்புக்கான காரணம் என்னவாக இருக்கும்? OTT இயங்கு தளம் எல்லோர் கைகளிலும் சென்று சேர்ந்து விட்டதாலா? சினிமாவின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் கூடிவிட்டதாலா ? வெகுஜன மக்களின் கலை / அழகியல் வேட்கை பெருகிவிட்டதாலா? அல்லது சீர்தூக்கிப் பார்த்து கருதிடுக்கிறேன் என ஊடகங்களை நிறைக்கும் பதிவுகளாலா? தராசு பிடித்து தர மதிப்பிடுவோர் கணித்துச் சொன்னால் “ஜெய்பீம்” திரைப்படத்திலும் கூட குறைகள் அடைபடலாம். மறுப்பதற்கில்லை .
உள்ளபடியே இன்று இங்கிந்த படத்தைப்பற்றி நான் பேச வரவில்லை. அன்றைய கள நிகழ்வின் தீவிரம் கண்டவர்களுடம் –திரைக் கலை ஞானமுள்ளவர்களும் நிறையவே பேசிவிட்டார்கள். போக அந்தப் படமும் அதன் நோக்கத்தை மிகச் சிறப்பாக செய்துவிட்டது என்பது தான் என்னுடைய எண்ணமும். நான் பேச விளைவது நம்மை கொந்தளிக்க வைத்த காரணத்தைப் பற்றித்தான்.
எளியோனை வலியோன் நசுக்குவதை ஒரு போதும் நம்மால் சகிக்க முடியாது என்பதைத்தாண்டி வேறு என்ன பெரிய காரணம் இருந்து விடப் போகிறது. மனதில் அறம் வாய்க்கப்பெற்ற சகலமானவர்களையும் கொந்தளிக்க வைக்க அந்த ஒற்றைக் காரணம் போதும் அல்லவா? நம் சக மனிதனை இவ்வளவு துச்சமாக நடத்தும் அதிகாரத்தை இவர்கள் எங்கு இருந்து கற்கிறார்கள்? எளியவனின் வலியெல்லாம் இங்கு ஒரு பொருட்டே அல்ல என்னும் கெடு மதியை யார் அவர்களுக்கு விதைத்தது? தன்னில் இருந்து பலவீனனும் – ஒரு போதும் திருப்பித்தாக்க வழியற்றவனுமான ஒருவனின் கெஞ்சலை இடக்கையால் புறம் தள்ளி மறு அடிக்குக் கை உயர்த்தும் மனோ நிலையை யார் அவர்களுக்குத் தாரைவார்த்தது.அறவுணர்வு உள்ள நமக்கு இந்தக்கேள்வி எழுந்திருக்க வேண்டும் அல்லவா?
படம் பார்த்தவர்களுக்கு இங்கு ஒரு காட்சியை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். பார்க்காதவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய காட்சிதான். இருளர் சமூக மக்கள் மீது எப்படியெல்லாம் போய் வழக்கு போடுகிறார்கள் என்பதை அறிய விசாரணை அதிகாரி ஒருவர் வந்திருப்பார். அவர் முன்னிலையில் அந்த பழங்குடி மக்கள் தங்களுக்கு நேர்ந்த கோரங்களை சொல்லிக்கொண்டுருப்பர்.முடிவில் 13 – 14 மதிக்கக் தக்க சிறுவன் எழுந்து தனக்கு நேர்ந்ததை சொல்லும் போது தாங்க முடியாமல் அதிகாரி எழுந்து வெளியே போவார் .
வன்முறையின் கோரமான முகம் அது பெண்களையும் குழந்தைகளையும் நோக்கி வெளிப்படும் போதுதான் நிகழ்கிறது. இந்த பூமிக்கு வந்து வெறும் 13 வருடங்களே ஆன ஒரு எளிய உயிரை, அரை வாழ்க்கை வாழ்த்த ஒருவர் அடிக்கிறார் என்பதை விடப் பெரிய வக்கிரம் என்ன இங்கு இருந்துவிடப் போகிறது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் போலீஸ் அதிகாரத்தின் ஒரு சிறு துளியயேனும் நீங்கள் கதி அற்ற ஒருவனாக பள்ளியில் அமர்த்த படியே கண்டிருப்பீர்கள் அல்லவா?
90 களின் குழந்தைகளோ அதற்கு முந்தியவர்களோ அதை கடக்காமல் பள்ளிப் படிப்பை தாண்டி இருப்பார்களா ? மாணவர்களை அடிக்க பிரம்பை மாணவர்களே வாங்கி வர சொல்லும் முதிர்ந்த எடமல்லவா அது. பரிட்சை தாளை கையில் வைத்துக்கொண்டு உயிர் பயத்தில் நின்றிருந்த நாட்கள் நமக்கு எவ்ளவு உண்டு. அழுத்தவன் அழுகலாம் அது ஒன்றும் அடிக்கு தடையல்ல என்பதை அங்குதான் முதன் முதலாக கண்டிருப்போம். சட்டங்கள் இப்போது அப்படி எல்லாம் இல்லையே ! இப்போதெல்லாம் யார் அடிக்கிறார்கள் என்பதற்கும், இப்போதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் என்பதற்கு பெரிய வேறுபாடுகள் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை.
இந்த அடியை நியாயப் படுத்துவோர் உண்டு. புனிதப்படுத்திக்குவோர்களுக்கா இங்கு பஞ்சம் . நம்மிடத்தில் சகலத்தையும் புனிதப் படுத்தும் வழக்கம் உண்டு. நமக்காக உழைக்கும் போலீஸ் – நமக்காக பணி செய்யும் இராணுவம் – நமக்காக கல்வி புகட்டும் ஆசிரியர் என எல்லாவற்றையும் புனிதப் படுத்திவிட்டார்கள். எந்த தொழிலும் மற்றொன்றுக்கு தாழ்த்த ஒரு தொழில் அல்ல என்ற மனநிலை வாய்க்கப் பெற்ற ஒருவர் எப்படி சிலவற்றை மட்டும் புனிதபடுத்த முடியும். சரி இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
வகுப்பறையில் உக்கார்ந்து சௌகரியமாக பாடம் எடுக்க நாற்காலி ஒன்று எப்போதும் அங்கேயே காத்துக்கிடப்பது உண்டு. போலீஸ் ஸ்டேஷன்களில் இருப்பது போலவே ! அதை ஒதுக்கி. எழுத்து மேசை மீது ஒரு தொடை அமர, மறு கால் ஆட்டிக்கொண்டு பிரம்பால் ஆள் சுட்டிக்காட்டி “இங்க வா” எனக் கம்பீரக் குரல் கொடுக்கும் நம் ஆசிரியப் பெருந்தகைகள் உடல் மொழி தானே அங்கு போலீஸ் காரர்களுக்கு கையளிக்கப் படுகிறது. உங்களிடம் பேசப் பயந்து போய், நடுங்கும் குரலில் சார் என்றழைக்கும் மாணவனிடம் போய் “ங்ஞா…. ! எனக்கு காது கொஞ்சம் கேக்குது இன்னும் சத்தமா “ என பதில் குடுக்கும் உங்கள் குரலும் தோரணையும் தானே ஐயா ஸ்டேஷன்களில் பாவப்பட்ட ஒருவனிடம் முட்டி எதிர் எதிரொலிக்கிறது.
ஒருவரைத் தாக்கவோ - காயப்படுத்தவோ யாருக்கும் சட்டம் அனுமதி வழங்கவில்லை என்பதை அறிய வேண்டிய வயதிலும் - இடத்திலும் தான் இத்துணை வன்முறையும் நடந்தேறுகிறது. எல்லா வற்றுக்கும் துவக்கப் புள்ளியும் வைக்கப் படுகிறது.
அவனைத் திருத்தத்தான் அடித்தேன் என்று சொல்லும் ஆசிரியரும் சரி, அவனை கண்டிக்கவே அடித்தேன் என்று சொல்லும் போலிசிஸும் சரி பிரம்பை பள்ளியிலும், லத்தியை ஸ்டேஷன்னிலும் விட்டுட்டுத் தான் வீடு திரும்புகிறார்கள். ஊரார் பிள்ளையை நாயடி அடித்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்ற கருத்து உண்டோ என்னவோ !