பழந்தமிழர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் ‘பெல்’ திரைப்படம்..!
பழந்தமிழர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் வகையில் "பெல்" என்ற புதிய படம் உருவாகி வருகிறது.
பழந்தமிழர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் வகையில் "பெல்" என்ற புதிய படம் உருவாகி வருகிறது.
பீட்டர் ராஜின் புரோகன் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் வெங்கட் புவன் இயக்கியுள்ளார். இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பெல் படத்திற்கு வெயிலோன் கதை வசனம் அமைக்க, பரணிக்கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசையமைத்திருக்கிறார். இந்த படம் பற்றி இயக்குநர் வெங்கட் புவன் கூறும்போது, இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும், பழந் தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக "பெல்" உருவாகியிருப்பதாக கூறினார்.
மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்தியர், பாதுகாக்கப்படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதை பாதுகாக்கவும் கட்டளையிட்டார். அந்த ரகசியங்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே படத்தின்
மையக்கதையாகும்.
காதல், குடும்பம், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக பெல் படமாக இருக்கும் என்றும், இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும் எனவும் வெங்கட் புவன் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து தற்போது சென்சார் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பெல் படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல் படத்துக்கான பாடல்களை பீட்டர் ராஜ் எழுதியுள்ள நிலையில், தினா நடனம் அமைத்துள்ளார். அதேபோல் படத்தொகுப்பாளராக தியாகராஜனும், சண்டை பயிற்சியாளராக ஃபயர் கார்த்திக்கும் பணியாற்றியுள்ளனர்.