Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு, தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
Shubman Gill: உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் டான் பிராட்மேனின், நான்கு சாதனைகளை இந்திய கேப்டன் சுப்மன் கில் உடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

Shubman Gill: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
சாதனைகளை நோக்கி கேப்டன் கில்:
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகள் மூலம், பல வரலாற்று சாதனைகளை தனது பெயருக்கு மாற்றுவதற்கான அரிய வாய்ப்புகளை, இந்திய கேப்டன் கில் பெற்றுள்ளார். அதன் மூலம் டான் பிராட்மேன், விராட் கோலி மற்றும் கவாஸ்கர் ஆகியோரின் சாதனைகள் முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 போடிட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 585 ரன்களை விளாசிய கில், இரண்டாவது போட்டியில் மட்டும் 430 ரன்களை சேர்த்துள்ளார். எட்க்பஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 269 மற்றும் 161 ரன்களை சேர்த்ததன் பல சாதனைகளை தவிடுபொடியாக்கினார். குறிப்பாக SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய அணி கேப்டன், ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமைகளையும் கில் பெற்றுள்ளார்.
பிராட்மேன் சாதனைகளுக்கு ஆபத்து?
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், மேலும் சில வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை கில் படைக்கக் கூடும். தற்போதுள்ள ஃபார்மையே மீதமுள்ள தொடருக்கும் அவர் பின்பற்றினால், கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த வீரராக கருதப்படும் டான் பிராட்மேன் படைத்த 4 சாதனைகளை முறியடிக்க முடியும். அவை கடந்த நூறாண்டுகளாக எவராலும் தகர்க்க முடியாதவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கில் உடைக்க வாய்ப்புள்ள பிராட்மேனின் 4 சாதனைகள்
1. டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த கேப்டன்:
1936-37 ஆஷஷ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த பிராட்மேன், 810 ரன்கள் குவித்தார். அதை முறியடிக்க கில்லிற்கு வெறும் 225 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க விதமாக அந்த ஆஷஷ் தொடரில் தான், பிராட்மேனும் முதல்முறையாக கேப்டனாக களமிறங்கி இருந்தார். ஐந்து போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 3 சதங்கள் உட்பட பிராட்மேனின் சராசரி ரன் விகிதம் 90 ஆக இருந்தது. கில்லுக்கும் இதுவே கேப்டனாக முதல் தொடராகும். ஏற்கனவே இவர் 3 சதங்களையும் இந்த தொடரில் பூர்த்தி செய்துள்ளார்.
2. ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்:
ஒரு டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையை பெறக்கூடிய, மிகவும் சிரமமான மற்றும் வாய்ப்புள்ள சாதனை கில்லின் முன்பு உள்ளது. இங்கிலாந்தில் 1930ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஷ் தொடரில் பிராட்மேன் 974 ரன்களை குவித்தார். அதனை காட்டிலும் கில் வெறும் 390 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய கில்லிற்கு வாய்ப்புள்ளதால், பிராட்மேனின் இந்த சாதனையையும் உடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பிடத்தக்க விதமாக, அந்த தொடரில் பிராட்மேன் முதல் இரண்டு போட்டிகளில் 394 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில், கில் ஏற்கனவே 585 ரன்களை குவித்துள்ளார்.
3. அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த கேப்டன்
வெறும் 11 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்து, அதிவேகமாக 1000 ரன்கள் விளாசிய கேப்டன் என்ற பெருமையை டான் பிராட்மேன் தன்வசம் வைத்துள்ளார். அந்த இலக்கை அடைய கில்லிற்கு 6 இன்னிங்ஸ்களில் 415 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. பெரிய இன்னிங்ஸ்களிலும், தற்போதுள்ள ஃபார்மும் அப்படியே தொடர்ந்தால், பிராட்மேனின் சாதனையை கில்லால் தவிடுபொடியாக்க முடியும். அதற்கான வாய்ப்புகளும் தாராளமாக உள்ளது.
4. ஒரு டெஸ்ட் சீரிஸில் அதிக சதங்கள்:
மூன்று சதங்களை விளாசியுள்ள கில், ஒரு தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் முறியடிக்கக் கூடும். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஜாம்பவானான வால்கோட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1955ம் ஆண்டில் 5 சதங்களை விளாசியிருந்தார். இந்த சாதனையை வேறு எந்தவொரு வீரரும் ஈடு செய்தது கூட கிடையாது. ஆனால், அடுத்த 6 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் விளாசினால் கில் புதிய சாதனையை படைக்க முடியும். இந்திய அணிக்கு எதிராக 1947ம் ஆண்டு பிராட்மேன் 4 சதங்களை விளாசியதே அவரது சாதனையாக உள்ளது.
உடையும் சூழலில் இந்தியர்களின் சாதனைகள்:
பிராட்மேனின் பல முக்கிய சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளதோடு, சில இந்திய ஜாம்பவான்களின் சாதனைகளை உடைக்கும் வாய்ப்பையும் கில் பெற்றுள்ளார். அதன்படி,
- ஒரு தொடரில் அதிக ரன் சேர்த்த இந்திய கேப்டன் என்ற கவாஸ்கரின் (732 ரன்கள்) சாதனையை முறியடிக்க கில்லிற்கு 148 ரன்கள் தேவை
- இங்கிலாந்தில் ஒரு தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற ட்ராவிட்டின் (602) சாதனையை முறியடிக்க கில்லிற்கு 18 ரன்கள் மட்டுமே தேவை
- இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஜெய்ஷ்வாலின் (712 ரன்கள்) சாதனையை முறியடிக்க கில்லிற்கு 127 ரன்கள் தேவை
- இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் என்ற கோலியின் (655) சாதனையை உடைக்க கில்லிற்கு 91 ரன்கள் மட்டுமே தேவை




















