TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 13 : சிப்பாய்க் கலகம் முதல் திராவிட இயக்கங்கள் வரை!
இந்திய அளவிலான கிளர்ச்சியை 3ஆகப் பிரித்து, 1857 கிளர்ச்சி, பழங்குடியினர் கிளர்ச்சி, விவசாயிகளின் கிளர்ச்சி எனப் படிக்க வேண்டும்.

உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
வரலாறு பகுதியில் வரலாறு மற்றும் பண்பாடு, பழங்கால இந்தியா, இடைக்கால இந்தியா குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நவீன இந்தியா குறித்துப் பார்க்கலாம்.
நவீன இந்தியா பகுதியில், கிளர்ச்சிகள், சீர்திருத்த இயக்கங்கள், கட்சிகள் ஆகியவை குறித்தும் அவற்றின் பணிகள் பற்றியும் காணலாம். இதை இந்திய - தமிழ்நாட்டு அளவில் ஒப்பிட்டுப் பார்த்துப் படிப்பது, நல்ல புரிதலை அளிக்கும் என்கிறார் ஆட்சியர் கல்வி அகாடமியின் நிறுவனர் ரத்தினம்.
''சீர்திருத்த இயக்கங்கள்
பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ணா மிஷன், யங் வங்காள இயக்கம் உள்ளிட்ட சமூக சீர்திருத்த இயக்கங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு, தொடங்கிய நபர், அவரின் பணிகள், இயக்கங்களின் முக்கியக் குறிக்கோள்கள் என்னென்ன? ஆகியவை குறித்துப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் இயக்கங்களில் ராஜாராம் மோகன் ராயின் பங்களிப்பு என்ன?, சீர்திருத்த இயக்கங்கள் பெண்களின் முன்னேற்றம், கல்வி, சாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆற்றிய தொண்டுகள் என்ன என்பது குறித்துப் படிக்க வேண்டும். தமிழக அளவில் வள்ளலார், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் வரலாற்றையும் பணியையும் படிக்க வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் புத்தம், சமணம் குறித்து இல்லையென்று அதைப் படிக்காமல் விட்டுவிடக்கூடாது. அதையும் படிக்க வேண்டியது அவசியம்.
7. இந்திய தேசிய இயக்கம் என்னும் பகுதியில் தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் பாடத்தைப் படிக்க வேண்டும்.
அதேபோல 8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஆகியவை இந்தப் பகுதியில் வரும்.
இதை எப்படிப் படிப்பது?
இந்திய அளவிலான கிளர்ச்சியை 3ஆகப் பிரித்து, 1857 கிளர்ச்சி, பழங்குடியினர் கிளர்ச்சி, விவசாயிகளின் கிளர்ச்சி எனப் படிக்க வேண்டும். இதில் இருந்து 100 சதவீதம் கேள்விகள் கேட்கப்படும். கிளர்ச்சிக்கான காரணம், நடைபெற்ற ஆண்டு, அதில் பங்குபெற்ற நபர்கள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றைத் தெளிவாகப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு வாரிசுரிமை இழப்புக் கொள்கைப்படி, தத்தெடுத்த குழந்தையாக இருப்பதால் ஜான்சி ராணி அரியணை ஏற முடியாது என்று ஆங்கிலேயர்கள் கூறியதால் கிளர்ச்சி ஏற்பட்டது. விவசாயிகள் கலகம் எந்தெந்த மாநிலங்களில் எந்த இடங்களில் நடைபெற்றது?, பழங்குடியினர் கலகம் எவ்வாறு தொடங்கியது என்பதைக் கவனித்துப் படிக்க வேண்டும். இந்திய அளவில் இவ்வாறு படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு அளவில் வேலூர் சிப்பாய்க் கலகம் உள்ளிட்டவற்றைப் படிப்போம். விவசாயிகள் போராட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இதை நினைவில்கொண்டு அதைக் கடந்தகால வரலாற்றோடு இணைத்துப் படிக்க வேண்டும். 1922ஆம் ஆண்டு பிப்ரவரியில் செளரிசெளரா நிகழ்வு நடந்தது. அது நடந்து 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த முறை அதிலிருந்து கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய அளவிலான அரசியல் கட்சிகளின் பணியையும் படிக்க வேண்டும். எந்தெந்த ஆண்டில், யாரின் தலைமையில் எங்கு காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றன? அதில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பதுகுறித்துத் தெளிவாகப் படிக்கவேண்டும். இந்திய, தமிழக அளவில் முதல் பெண் காங்கிரஸ் தலைவர், முதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முதல் பிரிட்டிஷ் காங்கிரஸ் தலைவர் ஆகியவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். கதர் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட பிற முக்கியக் கட்சிகள் குறித்தும் படிக்க வேண்டும்.
ஒப்பிட்டுப் பார்த்து படிக்க வேண்டும்
வரலாறு பகுதியில் பழங்குடியினர் குறித்து படித்ததை, அரசியலமைப்புப் பகுதியில் அட்டவணை 5, 6-ஆம் பகுதியில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம் பகுதியைப் பேசுகிறது. விவசாயிகள் குறித்துப் படிப்பதை அரசியலமைப்புப் பகுதியில் அட்டவணை 7-ல் விவசாயம் சார்ந்த பட்டியல் எது, அதில் நிலவும் பிரச்சினைகள், விவசாய மசோதா எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பதை ஒப்பிட்டுப் படியுங்கள்.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு
பாடத்திட்டத்தில் 8ஆவது பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் என்னும் பகுதியில் நான்காவதாக உள்ள தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள் என்னும் பாடத்திட்டத்தைப் படிக்க வேண்டும்.
அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்தும் படிக்கவேண்டும்.
19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சமூக, அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி- நீதிக்கட்சி, பகுத்தறிவுவாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இந்த இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் பங்களிப்புகள் ஆகியவை குறித்துப் படிக்க வேண்டியதும் அவசியம்.
உதாரணத்துக்கு நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சாதனைகள், அக்கட்சி நடத்திய மாநாடுகள், சமூகப் பங்களிப்புகள், தலைவர்களின் சேவை குறித்துப் படிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை, விதவைகள் மறுமணம், சென்னை பள்ளிகளில் உணவு உள்ளிட்டவை நீதிக்கட்சிகளின் சாதனைகளில் முக்கியமானவை.
அதேபோல பெரியார், அண்ணா உள்ளிட்ட எந்த சீர்திருத்தவாதி என்ன சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்று படிக்க வேண்டியது அவசியம். இதில் இருந்து பொருத்துக என்ற தலைப்பில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
சட்டங்களுக்கு முக்கியத்துவம்
பட்டயச் சட்டம், ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய கவுன்சில் சட்டம், இந்திய அரசு சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்ட ஆண்டு, அதில் அமல்படுத்தப்பட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இந்த சட்டங்கள் அனைத்தையும் ஒப்பிட்டுப் படிக்க வேண்டியது அவசியம்''.
இவ்வாறு ஆட்சியர் கல்வி அகாடமியின் நிறுவனர் ரத்தினம் தெரிவித்தார்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 10: அதிக மதிப்பெண்களை அள்ளித்தரும் அறிஞர்கள் பகுதி..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

