Champions Trophy 2025: இன்று எதிரிகள்..! 30 வருடத்திற்கு முன்பு? தோஸ்த் படா தோஸ்த், இந்தியா-பாகிஸ்தான் செய்த சம்பவங்கள்..
Champions Trophy 2025: ஐசிசியின் 1996 உலகக் கோப்பையின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள், இணைந்து செயல்பட்ட சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Champions Trophy 2025: நாளை தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 ஆண்டுகளுக்குப் பிறகு..
ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி நாளை தொடங்கி, வரும் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் முதல் போட்டி இதுவாகும். இந்தியா மற்றும் இலங்கையுடன் சேர்ந்து பாகிஸ்தான் நடத்திய, 1996 ஒருநாள் உலகக் கோப்பை தான் அந்நாட்டில் நடைபெற்ற உலகளாவிய கிரிக்கெட் போட்டியாகும். அதன் பிறகு பல்வேறு பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் சர்வதேச போட்டிகள் அங்கு நடைபெறவில்லை. நீண்ட இழுபறி பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தான், சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனாலும், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் தற்போதும் தனியே துபாயில் நடைபெறவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு இன்றளவும் இருநாடுகளுக்கு இடையே தொடரும் எல்லை பிரச்னை மற்றும் அரசியல் முரண்பாடுகள் போன்றவையே காரணமாகும். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் எவ்வளவும் நெருங்கி செயல்பட்டன என்று நீங்கள் அறிவீர்களா?
இந்தியாவிற்கு தோள்கொடுத்த பாகிஸ்தான்..
இன்று நிலவும் கிரிக்கெட் சூழலுக்கு நேர் எதிரான சூழல் தான் 1996ம் ஆண்டில் காணப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஆசியா Vs மற்ற நாடுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என்ற சூழலே நிலவியது. அப்போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களை வலுவாக நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், இன்றைய நிலவரத்தை போன்று அன்று பொருளாதார ரீதியாக பிசிசிஐ வலுவாக இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, 1996 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியாவிற்கு உதவி தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான், இந்தியாவிற்கு ஆதரவாக இணைந்து செயல்பட அப்போதைய பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் முன்வந்தன.
முன்னதாக, 1987ம் ஆண்டிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இங்கிலாந்திற்கு வெளியே நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும். அந்த போட்டியில் இந்தியா பெரும்பங்கு வகித்த நிலையில், 1996 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது.
இணைந்து செயல்பட்ட இந்தியா - பாகிஸ்தான்
இன்றைய ரசிகர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனால், 1996ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள், எதிரெதிர் துருவங்களாக இருக்க போதுமான காரணங்கள் ஏதும் இல்லை. அதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் வாரியம் எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தீவிரமாக விரும்பியது.
அதோடு, அந்த காலத்தில் ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் லாப நோக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்தபோது, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இணைந்து சென்று அங்கு ஒரு போட்டியில் பங்கேற்றன. இதன் மூலம், இலங்கை பாதுகாப்பான நாடுதான் என்பதை உறுதி செய்தன. இன்றும் இலங்கைக்கு பயணம் செய்து, அர்ஜுனா ரணதுங்கா போன்றவர்களிடம் கேட்டால், இது ஒரு மறக்க முடியாத ஒரு செயல் என்று குறிப்பிடுவர். கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் அபாய நாட்களுக்கு பதிலளித்த நாட்கள் அவை. ஆனால் இன்று, பலவீனத்தின் எந்த அறிகுறியும் அதிகமாக சுரண்டப்படுவதற்கான அழைப்பாக உள்ளது.
கிரிக்கெட்டிற்கு கூட தோல்வியே..
ஆனால், காலங்கள் உருண்டோடி இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர் துருவங்களாக உருவெடுத்துள்ளன. அரசியல் சூழல் காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாகவே பாகிஸ்தானுக்கு செலவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எல்லை தாண்டி கிரிக்கெட் விளையாட இந்தியாவை அனுமதிப்பதில்லை என்பதில் தூய அரசியல் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விளையாட்டும் அரசியலும் கலக்கக்கூடாது என்று சொல்பவர்கள் இருப்பார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் விளையாட்டு தனியாக இயங்காது. கிரிக்கெட் இந்தியாவில் ஒருபோதும் தோல்வியடையாத ஒரு பணப் பசுவாக உள்ளது. மேட்ச் பிக்சிங் நெருக்கடி, கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சம்பவங்களால் கூட, இந்தியாவில் கிரிக்கெட் மூலமான வருவாயை குறைக்க முடியவில்லை. ஆனால் அதனால் கூட அரசியல் சூழ்நிலையை முறியடிக்க முடியவில்லை.
பதில் இல்லாத கேள்வி?
விளையாட்டும் அரசியலும் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்பதைப் பார்க்க, இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த 2004 ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும். அந்த சுற்றுப்பயணம் எந்தப் போர்களையும் நிறுத்தவில்லை, குறிப்பிடத்தக்க வர்த்தக உறவுகளும் உருவாக்கப்படவில்லை. ஆனால் பலரையும் ஆச்சரியப்படுத்தி பெரும் வரவேற்பையும் பெற்றது.
ஆனால் இன்று, கிரிக்கெட்டின் மிகவும் லாபகரமான மற்றும் எதிர்பார்ப்புகள் மிகுந்த போட்டி, மெல்போர்ன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை, உள்ளூரில் கண்டுகளிக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றுவதன் மூலம் என்ன பலன் கிடைக்கிறது? என கேட்ட்ரால் அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது.




















