Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளை எதிர்க்கிறோம்.- அமைச்சர் அன்பில்.

மத்திய அரசு, தமிழ்நாட்டு அரசுக்குத் தர வேண்டிய ரூ.2.152 கோடி உங்கள் வீட்டுப் பணமா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை பாரிமுனையில் கல்வி நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.18) நடைபெற்று வருகிறது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார்.
உங்கள் வீட்டுப் பணமா?
அவர் கூறும்போது, ''தமிழ்நாட்டுக்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் நிலவுகிறது. மத்திய அரசு, தமிழ்நாட்டு அரசுக்குத் தர வேண்டிய ரூ.2.152 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? அது எங்களின் பணம். 43 லட்சம் குழந்தைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து புதிய குழு அமைக்கப்பட்டு, பரிசீலிக்கப்படும் என்றுதான் தலைமைச் செயலாளர் மூலம் கூறி இருந்தோம். குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றுதான் கூறினோம். அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறவில்லை. ஆனால் திரித்துக் கூறிவிட்டார்கள்.
தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது
ஒன்றை கிறிஸ்டல் கிளியராக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளை எதிர்க்கிறோம். கல்வி ஒத்திசைவுப் பட்டியலில்தானே இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி மத்திய அரசுக்குத் தெரியவில்லை.
இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.
ஆசிரியர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்
எங்களின் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

