CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகளை நடத்தும் முறை, 2026 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு திட்டம் அடுத்த வாரம் வெளியாகிறது.

வரும் 2026 - 27 கல்வி ஆண்டு முதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு பள்ளிகளுக்கான சிபிஎஸ்இ உலகளாவிய பாடத்திட்டத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு; ஆனால் கட்டாயமில்லை
சிபிஎஸ்இ-ன் புதிய திட்டத்தின்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும். புதிய முறையின் கீழ், மாணவர்கள் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இரண்டையும் எழுதத் தேவையில்லை. முதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள், இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். JEE மெயின் வடிவமைப்பைப் போலவே ஒரே ஆண்டில் அதிக மதிப்பெண்களை பெற இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்
2026 முதல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, டெல்லியில் நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், பள்ளிக்கல்வி செயலாளர், சிபிஎஸ்இ தலைவர் மற்றும் அமைச்சகம், சிபிஎஸ்இ மூத்த அதிகாரிகள் மற்றும் சிபிஎஸ்இ உலகளாவிய பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
விரைவில் வரைவுத் திட்டம் வெளியாகும் - அமைச்சர்
இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, சிபிஎஸ்இ உலகளாவிய பாடத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ-க்கு 2026-27 முதல் வெளிநாட்டு பள்ளிகளுக்கான சிபிஎஸ்இ உலகளாவிய பாடத்திட்டத்தை தொடங்கவும், அதன்படி விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத கற்றல் சூழலை உருவாக்குவதில் அரசு முக்கிய கவனம் செலுத்துவதாக கூறியுள்ள மத்திய கல்வி அமைச்சர், தேர்வு மேம்பாடு மற்றும் சீர்திருத்தம் அதற்கான முக்கிய படி என்று கூறியுள்ளார். இதை ஒரு படி முன்னோக்கி எடுத்துச் செல்லவே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த விவாதங்களின் வரைவு திட்டம் விரைவில் சிபிஎஸ்இ பொது ஆலோசனைக்காக வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், அடுத்த வாரம் வரைவு திட்டம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2026-ம் ஆண்டு முதல், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதும் முறை அமலாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

