TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 4: மதிப்பெண்களை அள்ள முத்தான பத்து- பொதுத்தமிழ் இலக்கணம் ஒரு பார்வை
அருஞ்சொற்பொருள் பகுதிக்கு மட்டும் 10-ம் வகுப்புக்கு பதிலாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருந்து 5 கேள்விகள் வரை கேட்கப்படலாம்.
குரூப் 4 பொதுத் தமிழுக்கான பாடத்திட்டத்தைப் பொதுவாக இலக்கணம், இலக்கியம் என்று 2 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதன்படி, மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் பயன்படும் இலக்கணம் பகுதியில், மொத்தம் 20 பகுதிகள் உள்ளன. இதில் மதிப்பெண்களை அள்ள முத்தான முதல் 10 பகுதிகளைப் படிப்பது பற்றி விளக்கமாகக் கற்பிக்கிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.
அரசு வேலைக்குச் சென்று ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழலில், அதைப் பிழையின்றி எழுதவே இலக்கணப் பகுதி பயன்படுகிறது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என 5 வகை இலக்கணங்கள் உள்ளன. தேர்வுகளில் பவநந்தி அடிகள் இயற்றிய நன்னூல் இலக்கணமே கேட்கப்படுகிறது. பள்ளி புத்தகங்களிலும் இதே இலக்கணம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
1. பொருத்துதல்
(i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(ii) புகழ்பெற்ற நூல், நூலாசிரியர்
(i)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
பொருத்துதல் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரையான ஒவ்வொரு பாடத்திலும் பின்பகுதியில் உள்ள அருஞ்சொல் பொருளை முழுமையாகக் கற்றால் போதும். இந்தப் பகுதியில் 3 விதமாகக் கேள்விகள் கேட்கப்படலாம்.
* நேரடியாகப் பொருள் கூறுக (உதாரணத்துக்கு... யாக்கை என்பதன் பொருள் என்ன?)
* கீழ்க்கண்டவற்றுள் பொருந்தியவற்றைக் கூறுக (4 தேர்வுகளில் 1 தேர்வு மட்டுமே சரியாகக் கொடுக்கப்பட்டிருக்கும்)
* பாடல் வரிகளைக் கொடுத்து அதன் பொருள் கூறுக (’நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி கொடுக்கப்பட்டு, இதில் யாக்கை என்பதன் பொருள் என்ன? என்று கேள்வி கேட்கப்படும்.)
அருஞ்சொற்பொருள் பகுதிக்கு மட்டும் 10-ம் வகுப்புக்கு பதிலாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருந்து 5 கேள்விகள் வரை கேட்கப்படலாம்.
(ii)புகழ்பெற்ற நூல், நூலாசிரியர் (இது இலக்கியப் பகுதி என்றாலும், இலக்கணத்தில் உள்ள பாடத்திட்டம்)
உதாரணங்களுக்கு:
* பாஞ்சாலி சபதத்தை இயற்றியவர் யார்? - பாரதியார்
* குடும்ப விளக்கு- பாரதிதாசன்
* தொல்காப்பியம் - தொல்காப்பியர்
* திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2. தொடரும் தொடர்பும் அறிதல்
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
(i)இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
உதாரணங்களுக்கு:
* தெய்வப்புலவர் என்னும் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் யார்?- திருவள்ளுவர்
* சொல்லின் செல்வர்?- ரா.பி.சேதுப்பிள்ளை
* கூத்துப்பட்டறை என்று அழைக்கப்படுபவர்?- நா.முத்துசாமி (அண்மையில் நடைபெற்ற புள்ளியியல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது)
(ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
உதாரணங்களுக்கு: உத்தரவேதம் - திருக்குறள்
இரட்டைக் காப்பியம்- சிலப்பதிகாரம், மணிமேகலை
மேலே உள்ள தொடரும் தொடர்பும் அறிதல் பகுதியில் இருந்து இரண்டு கேள்விகள் தேர்வில் வரலாம்.
3. பிரித்தெழுதுக
பிரித்தெழுதுதல் குறித்துத் தெரிந்துகொள்ள புணர்ச்சி விதிகளை முழுமையாக அறிதல் முக்கியம். நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஏற்படுகின்ற மாற்றமே புணர்ச்சி.
உதாரணத்துக்கு, வாள் + ஆட்டம்- வாளாட்டம்.
இலக்கணத்தில் இருந்தும் பிரித்தெழுதுதல் கேட்கப்படலாம். தற்குறிப்பேற்ற அணி- தன் + குறிப்பு + ஏற்றம்+ அணி.
பாடல் வரிகளில் இருந்து பிரித்தெழுதச் சொல்லி கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இந்தப் பகுதியில் இருந்து 1 அல்லது 2 கேள்விகள் தேர்வில் கேட்கப்படும். இதனால் பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும் புணர்ச்சி விதிகளைப் படித்துவைத்துக்கொள்ள வேண்டும்.
4. எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்
முன்பெல்லாம் நேரடியாக எதிர்ச் சொற்களே கேட்கப்பட்டன. இப்போது ஒரு சொல்லின் அருஞ்சொற்பொருளை அறிந்து, அதற்கான எதிர்ச்சொல்லை பதிலாக எழுத வேண்டியுள்ளது.
உதாரணத்துக்கு, மிசை (மேல்) என்பதன் எதிர்ச்சொல் என்ன? என்று கேட்கப்படும். இதற்கு முதலில் மிசை என்ற சொல்லின் பொருளை உணர்ந்து, அதற்கான எதிர்ச் சொல்லான ’கீழ்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இருந்து தேர்வுதோறும் 1 கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
உதாரணத்துக்கு,
இதில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(a) ஆகாயம் - வானம், (b)யாக்கை - உடல் ,(c) வானரம் - ஆடு, (d) வாய்மை - உண்மை.
அருஞ்சொற்பொருளைக் கசடறக் கற்றிருந்தால், இதில் இருந்து நாம் பொருந்தாச் சொல்லை எளிதில் கண்டறியலாம்.
6. பிழை திருத்தம்
(i)சந்திப்பிழையை நீக்குதல்
வாக்கியத்தில் ஏற்படும் பொருட்குழப்பத்தை நீக்கவே சந்தி பயன்படுத்தப்படுகிறது. சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களையே சந்தி என்கிறோம். இதை நாம் தெரிந்துகொள்ள வல்லினம் மிகும், மிகா இடங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது என்று குறிப்பிட்டுள்ளதை, அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது என்று சந்தியைச் சேர்த்து, நீக்கி எழுத வேண்டும்.
9, 10-ம் வகுப்புப் புத்தகங்களில் தெளிவாக இதுகுறித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில், வல்லினம் மிகும் 28 இடங்கள், மிகாத 22 இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதில் இருந்து 1 அல்லது 2 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
(ii) ஒருமை, பன்மை பிழைகளை நீக்குதல்
எடுத்துக்காட்டாக, மாடு மேய்கின்றன என்று கொடுக்கப்பட்டிருந்தால் மாடு மேய்கிறது அல்லது மாடுகள் மேய்கின்றன என்பதே சரியாக இருக்கும். இதற்கு 6-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தைப் படித்தால் போதும்.
(iii) மரபுப் பிழைகள்
விலங்குகள், பறவைகளின் ஒலிக்குறிப்புகளைத் தவறாக எழுதுவதும் பேசுவதுமே மரபுப் பிழைகள் ஆகும். எடுத்துக்காட்டாக, நாய் கத்தும் என்பதற்குப் பதிலாக நாய் குரைக்கும் என்பதே சரி.
அதேபோல கோழி - கொக்கரிக்கும், ஆந்தை - அலறும், மயில் அகவும் ஆகியவையே சரி. இதற்கு 8-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தைப் படித்தால் போதும்.
(iv) வழுவுச் சொற்களை நீக்குதல்
வழு - பிழை. தவறான சொற்களை நீக்குவதே வழுவுச் சொல் நீக்கமாகும். தேனீர் அல்ல, தேநீர் என்பதே சரி.
தாவாரம் அல்ல தாழ்வாரம், கட்டிடம் அல்ல கட்டடம் என்பதே சரி.
(v) பிறமொழிச் சொற்களை நீக்குதல்
தமிழ் மொழியில் ஆங்கிலம், வடமொழி, பார்சி, உருதுச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும். மன்னிப்பு என்பதே உருதுச்சொல்தான். அதற்குரிய தமிழ்ச் சொல் - பொறுத்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, கீழ்க்கண்டவற்றுள் சரியான தமிழ்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
கஜமுகன், நான்முகன், அவசரம், சிம்மாசனம்.
இதில் நான்முகன் என்பதே தமிழ்ச் சொல். அவசரம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. விரைவு என்பதே தமிழ்ச்சொல். சிம்மாசனத்துக்கு அரியாசனம் என்பதே சரி.
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
இதற்குக் கலைச்சொல் அறிவோம் என்ற பகுதி ஒவ்வொரு தமிழ்ப் பாடத்துக்குப் பின்பும் உள்ளது. அதை முழுமையாகப் படிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, tempest என்னும் வார்த்தைக்குப் பெருங்காற்று என்பது தமிழ்ச் சொல். இவற்றை 6- 12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்குப் பின்னால் இருந்து படிக்க வேண்டும். இதிலிருந்தும் 1 அல்லது 2 கேள்விகள் கேட்கப்படும்.
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
இதில் மயங்கொலிப் பிழைகளை நீக்கி, அதாவது ’ல, ள, ழ’, ’ர, ற’, ’ன,ண’ உச்சரிப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து எழுத வேண்டும். பழைய சமச்சீர் 11, 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் லகர, ளகர, ழகர வேறுபாடுகள், ரகர, றகர மற்றும் னகர, ணகர வேறுபாடுகள் தெளிவாக உள்ளன.
எடுத்துக்காட்டாக, தலை (உடல் உறுப்பு), தளை (கட்டுதல்), தழை (தழைந்தோங்குதல், சங்ககால மகளிரின் அணிகலன்) மூன்று சொற்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. அறம், அரம் ஆகிய சொற்களும் ஆனை, ஆணை ஆகியவையும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டவை. இவற்றைச் சரியாகக் கண்டறிந்து எழுத வேண்டும்.
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
தமிழைப் பொறுத்தவரை 42 எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களாக உள்ளன. இவற்றைத் தெளிவாகப் படித்தாலே போதும்.
எடுத்துக்காட்டுக்கு, கா - காடு, காவல்
ஆ- பசு
கோ- மன்னன், கோவில் உள்ளிட்ட 42 எழுத்துகள் உள்ளன.
இது 8-ம் வகுப்பு புதியப் பாடப்புத்தகத்தில் முதல் பருவத்தில் உள்ளது. இதில் இருந்தும் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
வேர்ச்சொல் என்பது ஒரு கட்டளைச் சொல். அல்லது வினைமுற்றின் பகுதியாக வருவது. வினை முற்றுப் பெற்றதைக் குறிப்பது வினைமுற்று. பாடினான் என்னும் வினைமுற்றின் கட்டளைச் சொல் ’பாடு’. இதுதான் வேர்ச்சொல். செய்தான் என்னும் வினைமுற்றின் வேர்ச் சொல் ’செய்’. இதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் இலக்கணப் பகுதியில் இருந்தாலும் பெரும்பாலும் பொதுவானவையே. மீதமுள்ள 10 பகுதிகளே முழுமையான தமிழ் இலக்கணத்தைக் குறிப்பவை. அவற்றைப் படிப்பது எப்படி?
- பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com