CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
பெற்றோர்கள், உறுதி செய்யப்படாத தகவல்களில் ஈடுபடவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்று தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.- சிபிஎஸ்இ

2025ஆம் ஆண்டுக்கான10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இவை அனைத்தும் பொய்யே என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கவே
இத்தகைய தகவல்கள் ஆதாரம் அற்றவை என்றும் தேவையில்லாத பதற்றத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவே இவ்வாறு செய்யப்பட்டு வருதாகவும் சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தவறான தகவலைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
தேர்வு முறையையே சீர்குலைக்கும்
இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’பெற்றோர்கள், உறுதி செய்யப்படாத தகவல்களில் ஈடுபடவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்று தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். யூடியூப், ஃபேஸ்க்புக், எக்ஸ் பக்கங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தேர்வு செயல்முறையை சீர்குலைக்கும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களும், CBSE-ன் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். வேறு எதையும் கவனிக்கக்கூடாது.
இத்தகைய தகவல்கள் ஆதாரம் அற்றவை.தேவையில்லாத பதற்றத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவே இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் சிபிஎஸ்இ-ன் நியாயமற்ற வழிமுறைகள் விதிகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு
நாடு முழுவதும் 42 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 24.12 லட்சம் பேர் 84 தேர்வுகளை எழுத உள்ளனர். அதேபோல 120 வகையான பாடங்களை 17.88 லட்சம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

