TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 6: தமிழ் இலக்கியம்...முக்கியத்துவமும் வெல்லும் வழிமுறைகளும்!
TNPSC Group 4 Exam Preparation : திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை முறை (7) இடம்பெற்றுள்ளது?, திருக்குறளில் 2 முறை வரும் அதிகாரம் (குறிப்பறிதல்) எது?
உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் இலக்கணத்தில் உள்ள 20 பகுதிகளைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். பொதுத்தமிழ் இலக்கியப் பகுதிகளைப் படித்து முழு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்று இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இதுகுறித்து விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.
திருத்தி அமைக்கப்பட்ட பொதுத் தமிழ் இலக்கணப் பாடத்திட்டத்தில் 21ஆவது பகுதியாக, பழமொழிகள் என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது பழைய 6 - 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது. அதையும் தேர்வர்கள் படித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
21. பழமொழிகள்
ஆங்கிலத்தில் பழமொழிகள் கொடுக்கப்பட்டு, அதற்கான தமிழ்ப் பொருளை, பழமொழியைத் தேர்வில் கேட்கலாம்.
பொதுத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான புதிய சமச்சீர் பாடப்புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். தேவையான சில பகுதிகளுக்கு மட்டும் பழைய பாடப்புத்தகத்தைப் படித்தால் போதும். இதில் மொத்தம் 10 பகுதிகள் உள்ளன.
1. திருக்குறள்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (25 அதிகாரங்கள் மட்டும்)
அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
திருக்குறள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இந்தப் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற முதலில் 25 அதிகாரங்களில் உள்ள 250 குறள்களையும் தெளிவாக, விளக்கத்துடன் படிக்க வேண்டும்.
திருக்குறள் தொடர்பான செய்திகள் பகுதிக்கு திருக்குறள் நூல் குறிப்பு, திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு, திருக்குறள் ஆராய்ச்சி செய்திகள் குறித்த தகவல்களைக் கூடுதலாகப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருவள்ளுவர் ஆண்டு எண்ணிக்கை, திருவள்ளுவர் நாள், திருவள்ளுவர், திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள், திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை முறை (7) இடம்பெற்றுள்ளது?, திருக்குறளில் 2 முறை வரும் அதிகாரம் (குறிப்பறிதல்) எது? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் படித்துக்கொள்ள வேண்டும்.
திருக்குறள் தொடர்பான மேற்கோள்கள் பகுதியில், குறளில் சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, அதன் பொருள் என்ன என்று கேள்விகள் கேட்கப்படலாம். அதேபோல எந்த நூலில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன என்றும் கேள்விகள் கேட்கப்படலாம்.
தொடரை நிரப்புதல் பகுதியில், கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற வகையில் கேட்கப்படும்.
உதாரணத்துக்கு, காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்
என்னும் திருக்குறளில், காமம் வெகுளி மயக்கம் என்பனவற்றின் பொருள் என்ன என்று கேட்கலாம். காமம் என்றால் ஆசை, வெகுளி என்றால் சினம், மயக்கம் என்றால் அறியாமை என்று பொருள். இதைத் தெரிந்துபடித்தால், சரியான விடை அளிக்கலாம். அதேபோலத் திருக்குறளில் ஏதாவது ஒரு வரியைக் கொடுத்து, இது எந்த நூலில் இடம்பெற்றுள்ளது என்றும் கேள்விகள் கேட்கலாம். இவை இரண்டும் மேற்கோள்கள் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்.
தொடரை நிரப்புதல் பகுதியில் ,
---- ---- ---- இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
எவை மூன்றும் நாமம் கெடக்கெடும் நோய்? எனக் கேள்விகள் வரலாம். அதற்கு, காமம் வெகுளி மயக்கம் என்பதே சரியான பதிலாக இருக்கும்.
2.அறநூல்கள்
அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்
இதில், நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
முப்பால்
திரிகடுகம்
ஆசாரக் கோவை
பழமொழி
சிறுபஞ்சமூலம்
கைந்நிலை
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி ஆகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பாடப்புத்தக்கத்தில் எங்கெல்லாம் வருகிறதோ அதை மட்டும் படித்துக்கொண்டால் போதும். இதில் இருந்து, குறிப்பிட்ட சில பாடல் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன, நூலைத் தொகுத்தவர் யார், நூல் குறிப்பு ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படலாம்.
நாலடியார் பற்றிய செய்திகள், நூல் குறிப்பு, பாடல் வரிகளைப் படிக்க வேண்டும். இது புதிய 7-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் 2-ம் பருவத்தில் உள்ளது. நான்மணிக்கடிகை நூல் குறிப்பு பழைய 6-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது.
பழமொழி நானூறு நூலில், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு பழமொழி வீதம் மொத்தம் 400 பழமொழிகள் இருக்கும். கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா என்பதுமாதிரியான பழமொழிகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும். முன்றுறை அரையனார் இந்த நூலை எழுதியுள்ளார். புதிய 7ஆம் வகுப்பு 3ஆம் பருவத்தில் இதைப் படிக்கலாம்.
முதுமொழிக் காஞ்சி
முதுமொழிக் காஞ்சியும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இது பழைய 7-ம் வகுப்பு முதல் பருவப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. திரிகடுகம் என்றால் 3 மருந்துகள். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் 3 மருந்துகளைப்போல, இந்த நூல் ஒவ்வொரு பாடலிலும் 3 கருத்துகளைக் கொண்டிருக்கும்.
செய்யக்கூடாத 40 செயல்கள் இன்னா நாற்பது, செய்ய வேண்டிய 40 செயல்கள் இனியவை நாற்பது பாடல்களில் இடம்பெற்றிருக்கும். பாடப் புத்தகத்தில் இந்த நூல்களில் இருந்து கொடுக்கப்பட்ட பாடல்களைப் படித்தால் போதும்.
சிறுபஞ்சமூலம்- சிறிய 5 வேர்கள் உடல் பிணியைப் போக்கும். அதுபோல இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்றுள்ள தலா 5 கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கும். இது புதிய 9-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது.
ஏலாதி- ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களும் மக்களின் பிணியைப் போக்குவதுபோல ஏலாதி நூல் பாடல்கள் அறியாமை என்னும் பணியை அகற்றும். இது பழைய 10-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது. கணி மேதாவியார் இந்த நூலை இயற்றியவர் ஆவார்.
ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
ஒளவையார் பற்றிய குறிப்புகளைத் தேர்வுகளில் கேட்கலாம். இவர் மூதுரை, கொன்றைவேந்தன், நல்வழி, ஆத்திசூடி உள்ளிட்ட நூல்களை இயற்றியவர். ஒளவையார் பாடல்கள் 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்தில் அமைந்துள்ளன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
மேற்குறிப்பிட்ட 10 நூல்களைத் தவிர மீதமுள்ள 8 நூல்கள் குறித்தும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான பாடல் வரிகள் இருந்தால், அதற்கான மேற்கோள்களைப் படிக்கலாம்.
தேர்வுகளில் குறிப்பிட்ட செய்யுள்களைக் கொடுத்து, இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது? என்றோ, வரிகளின் பொருள் என்ன? என்றோ, நூல் ஆசிரியர் குறித்தோ கேள்விகள் கேட்கலாம்.
3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்
கம்ப ராமாயணம் தொடர்பான செய்திகள் புதிய 10, 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. ராமனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட காவியமே கம்ப ராமாயணம்.
கம்ப ராமாயணத்தில் உள்ள 6 காண்டம், 118 படலங்கள் முழுவதையும் படிக்கத் தேவையில்லை. பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களைப் படித்தால்போதும். இதில் பா வகைகள் குறித்தும், ஆசிரியர், நூல் குறிப்பு, மேற்கோள்கள் ஆகியவை பற்றியும் படிக்க வேண்டியது அவசியம்.
இராவண காவியம்
இராவண காவியத்தில் ராவணன் பாட்டுடைத் தலைவனாக உள்ளான். இந்த நூலை இயற்றியவர் புலவர் குழந்தை. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் புலவர் குழந்தை. அவர் குறித்த சிறப்புகளையும் படிக்க வேண்டும். இராவண காவியத்தில் உள்ள 5 காண்டங்கள், பா வகைகள், சிறந்த தொடர்கள் குறித்துப் படிக்க வேண்டும். இந்த நூல் தொடர்பான செய்திகள் புதிய 9-ம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்கொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
பத்துப்பாட்டு தவிர மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எட்டுத்தொகை நூல்கள். அவற்றில் உள்ள செய்திகள், மேற்கோள்கள், அடி வரையறைகள் குறித்துப் படிக்க வேண்டும்.
புறநானூற்றுக்கு அதிக முக்கியத்துவம் தேவை
புறநானூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இந்தப் பாடல்கள் புதிய 6ஆம் வகுப்பு முதல் பருவத்திலும் 9, 11, 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலும் உள்ளன. ஏனெனில், இதில் ஏராளமான மேற்கோள் வரிகள் கொடுத்திருப்பர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என்ற வரிகள் புறநானூறில் உள்ளன. இதே வரிகள் மணிமேகலையிலும் வந்துள்ளன. எனவே கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டியது அவசியம்.
எட்டுத்தொகை
பல்வேறு புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தொகுக்கப்பட்ட நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை. உதாரணத்துக்கு புறநானூற்றை 156 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறில் உள்ள 400 பாடல்களை 145 பேர் பாடியுள்ளனர். ஆனால், பத்துப்பாட்டில் 10 புலவர்கள் 10 நூல்களை எழுதியுள்ளனர். இதில் ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு பாட்டுடைத் தலைவர் மட்டுமே இருப்பார்.
அகநானூறு பாடல்கள் 6, 11, 12ஆம் வகுப்புப் புத்தகங்களில் உள்ளன. நற்றிணை 11ஆம் வகுப்பிலும் குறுந்தொகை 9-ம் வகுப்பிலும் 11ஆம் வகுப்பிலும் உள்ளது.
5. சிலப்பதிகாரம்- மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
சிலம்பு + அதிகாரம் - சிலம்பினால் விளைந்த கதையைக் கூறுவதால், இது சிலப்பதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள காண்டங்கள், படலங்கள், காதைகளின் விவரம், ஆசிரியர் குறிப்பு, கதை மாந்தர்கள் கோவலன், கண்ணகி குறித்துப் படிக்க வேண்டும்.
நூலை எழுதிய இளங்கோவடிகளின் வாழ்க்கை குறித்தும் படிக்க வேண்டியது முக்கியம். சேர மரபினைச் சேர்ந்த இளங்கோவடிகள்தான் நாடாள்வார் என்று ஜோதிடர்கள் கணித்த நிலையில், அதைப் பொய்ப்பிக்க வேண்டி துறவு பூண்டு, புலவர் ஆனவர் இளங்கோவடிகள்.
சிலப்பதிகாரம் 6, 10, 12ஆம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில் உள்ளது. இதில் உள்ள மேற்கோள்கள், வரிகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
மணிமேகலை
கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் இருக்கும்போது உருவான காவியமே மணிமேகலை. கதையில் உள்ள அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி பாத்திரம், அறவுணர்வு மிக்க ஆதிரை பிச்சையிட்டது, அதன்மூலம் மாதவி மக்களின் பசிப்பிணியைப் போக்கியது உள்ளிட்ட கிளைக் கதைகளைத் (புத்தகத்தில் உள்ள) தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றின் உட்பிரிவுகள் குறித்தும் படிக்க வேண்டும்.
ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் 5 காப்பியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவை குறித்த நூல் குறிப்புகள் பள்ளிப் புத்தகங்களில் எங்கெங்கு வந்துள்ளன என்று தெரிந்து, அதைப் படித்தால் போதும்.
சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகிய ஐந்தும் ஐஞ்சிறுங் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் பள்ளிப் புத்தகங்களில் என்னென்ன தலைப்புகள், மேற்கோள்கள், செய்திகள் உள்ளனவோ அதைப் படித்தால் போதுமானது. இவற்றின் தகவல்கள் குறைவாகவே இருக்கும் என்பதால் எளிதில் இதைப் படித்து முடிக்கலாம்.
அடுத்த 5 பாடத்திட்டங்கள் என்னென்ன?
அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com