Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM BJP: டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா எனும் பாஜக பெண் எம்.எல்.ஏ., நாளை பதவியேற்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Delhi CM BJP: டெல்லி முதலமைச்சர் பதவிக்கு இறுதியாக 3 பேரின் பெயர்களை, பாஜக தலைமை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா:
தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகின்றன. 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றிய பிறகும் கூட, முதலமைச்சர் யார் என்பதை பாஜக தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. நீண்ட இழுபறி, பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, இறுதியாக 3 பேரின் பெயர்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை நடைபெற உள்ள பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் கட்சி தனது முடிவை அறிவிக்கவும், வியாழக்கிழமை பிரமாண்டமான பதவியேற்பு விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா - எங்கு? எப்போது?
டெல்லியில் புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா, நாளை காலை 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அக்ஷய் குமார், விவேக் ஓபராய் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்கள், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்ற பிரபல தொழிலதிபர்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்த பிற மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும்.
டாப் 3 முதலமைச்சர் வேட்பாளர்கள்:
ரேகா குப்தா, ஆஷிஷ் சூட் மற்றும் விஜேந்திர குப்தா ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களின் பெயர்கள் தான், முதலமைச்சர் பதவிக்கான இறுதி போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளதாக பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேகா குப்தா: தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை விழ்த்தி, ஷாலிமார் பாக் தொகுதியின் எம்.எல்.ஏ.-வான ரேகா குப்தா முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரேகா குப்தா முதல் முறையாக டெல்லி சட்டமன்றத்தில் இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெண் முதலமைச்சரே இல்லை. இந்த கூற்று அவருக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மாணவர் சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
விஜேந்திர குப்தா: போட்டியில் இரண்டாவது பெயர் ரோகிணி தொகுதி எம்.எல்.ஏ விஜேந்திர குப்தா. அவர் கடந்த முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலை வீசியபோது கூட, அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பர்தீப் மிட்டலை தோற்கடித்து விஜேந்திர குப்தா அந்த இடத்தில் வெற்றி பெற்றார். வைசிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கட்சியின் பழைய முகத்தாலும், அவர் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆர்.எஸ்.எஸ். தலைமையும் விஜேந்திர குப்தாப்வையே விரும்புகிறது.
ஆஷிஷ் சூட் : ஆம் ஆத்மி கட்சியின் பர்வீன் குமாரை தோற்கடித்த ஜனக்புரி தொகுதி எம்.எல்.ஏ., ஆனவர் ஆஷிஷ் சூட். முதலமைச்சர் பதவிக்கான மூன்றாவது தேர்வாக உள்ளார். கட்சியின் புதிய தலைமுறை தலைவர்களில் ஒரு வலுவான மூலோபாயவாதியாகக் கருதப்படுகிறார். சூட் பாஜகவின் பஞ்சாபி பேசும் முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் தனது அரசியல் வாழ்க்கையை ஏபிவிபியுடன் தொடங்கினார் மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

