TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 12- வரலாறு முக்கியம் அதிகாரிகளே... எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம்?
TNPSC exam preparation Tips: குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு பகுதியில் உள்ள வரலாறு பகுதியை எப்படிப் படிக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, புரிந்து, திட்டமிட்டு, கேள்வித் தாள்களை ஒப்பிட்டுப் படித்தால், ஒவ்வொருவரும் தன் முயற்சியிலேயே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்கிறார் ஆட்சியர் கல்வி அகாடமியின் நிறுவனர் ரத்தினம்.
குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு பகுதியில் உள்ள வரலாறு பகுதியை எப்படிப் படிக்க வேண்டும் என்பது குறித்து அவரின் பார்வையில் பார்க்கலாம்.
யூபிஎஸ்சி தேர்வில் இந்தியா பற்றி விரிவாகவும் தமிழ்நாடு குறித்து குறைவாகவும் படிப்போம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இது அனைத்துப் பாடங்களுக்கும் பொருந்தும்.
பாடத்திட்டப் பகுதிகளைப் படிப்பதைப் போல, பழைய கேள்வித் தாள்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். ஏனெனில் அதன் மூலமே எப்படிக் கேள்விகள் கேட்கப்படலாம் என்பது புரிய வரும்.
இந்தப் பகுதியில் வரலாறு பகுதியை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாக வரலாறு பகுதியை 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.வரலாறு மற்றும் பண்பாடு
2. பழங்கால இந்தியா
3.இடைக்கால இந்தியா
4. நவீன இந்தியா
முதல் பகுதியான வரலாறு மற்றும் பண்பாடு பகுதியை பொது அறிவு பகுதியில் உள்ள பாடத்திட்டத்தின் 4 மற்றும் 8ஆவது பகுதிகளைக் கொண்டு படிக்கலாம்.
4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
i.சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - தென் இந்திய வரலாறு.
ii.இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு.
iii.இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்.
i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.
ii.திருக்குறள்:
(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
(ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
(ஒ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம்,
மனிதநேயம் முதலானவை.
(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு .
(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.
iii.விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில்
பெண்களின் பங்கு.
iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
ஒவ்வொரு பாடங்களின் பாடத்திட்டமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கும். உதாரணத்துக்கு இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு 4ஆவது பகுதியிலும் 8ஆவது பகுதியிலும் என இரண்டு இடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஆவது பகுதியில் இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. அதேபோல 8ஆவது பகுதியான தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் என்னும் பாடத்திட்டம் உள்ளது. இவற்றை ஒன்றாகப் படிக்க வேண்டும்.
அதேபோல சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் பகுதி- பொதுத் தமிழ் பகுதியில் தொல்காப்பியம் முதல் தற்கால பக்தி இலக்கியம், ஹைக்கூ வரை ஏற்கெனவே வந்துள்ள பாடம்தான். இதற்குப் பொதுத்தமிழ் பகுதியை முழுமையாகப் படித்தாலே போதும். பொதுத்தமிழ் பகுதியில் பொதுவான கேள்விகளும் பொது அறிவில் தமிழ் சார்ந்தும் கேள்விகள் வரும்.
1.வரலாறு மற்றும் பண்பாடு
இதை இந்திய அளவிலும் தமிழ்நாட்டு அளவிலும் படிக்க வேண்டும். இந்திய அளவிலான வரலாற்றைப் படிக்க 4ஆவது பகுதியில் உள்ள ii, iii பகுதிகளைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டு அளவிலான வரலாற்றைப் படிக்க 8ஆவது பகுதியில் உள்ள iii, iv பகுதிகளைப் படிக்க வேண்டும். (விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு | தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்).
அதேபோல 2ஆவது பகுதியான நடப்பு நிகழ்வுகள் பகுதியில் உள்ள, தேசியச் சின்னங்கள் பகுதியையும் படிக்க வேண்டும்.
2. பழங்கால இந்தியா
இதையும் இந்திய, தமிழக அளவில் என்று பிரிக்க வேண்டும். இந்திய அளவில், 4ஆவது பகுதியில் உள்ள சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இதில் இந்த 2 தலைப்புகள் மட்டுமே உள்ளது என்று புறம்தள்ளிவிடக் கூடாது. வேத காலம், மெளரியர்கள், தமிழ் ஆட்சியாளர்கள் குறித்தும் படிக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் விவசாயம் எப்படி இருந்தது? பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது? நிர்வாகம் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். இந்தப் பகுதியில் புத்தம், சமணம் குறித்துக் கட்டாயம் கேள்விகள் கேட்கப்படும்.
இதுவே தமிழக அளவில், 8ஆவது பகுதியில் i-ல் உள்ள தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் என்ற பகுதியில் கீழடி, கொடுமணல் உள்ளிட்டவை குறித்துப் படிக்க வேண்டும்.
3.இடைக்கால இந்தியா
இந்தப் பகுதியில் டெல்லி சுல்தான், மொகலாய ஆட்சி, மராத்தியர்கள் ஆட்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். அதேபோல பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், விஜய நகரம், நாயக்கர்கள் உள்ளிட்ட தென்னிந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும். இதில், சோழர்கள், தஞ்சை பெரிய கோயில், பல்லவர்கள், மகாபலிபுரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதில் பக்திக் காலம் சார்ந்த தலைப்புகள் இல்லாவிட்டாலும் அதையும் சேர்த்துப் படிக்க வேண்டும். தமிழகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், இந்திய அளவில் சைதன்யர்கள், ராமானுஜர்கள் குறித்துப் படிக்க வேண்டும்.
4. நவீன இந்தியா
நவீன இந்தியா பகுதியை வழக்கம்போல இந்தியா, தமிழகம் என்று 2 பிரிவுகளாகப் பிரித்துப் படிக்க வேண்டும்.
குரூப் 4 பாடத்திட்டத்தின் 7ஆவது பகுதியின் i பிரிவான இந்திய தேசிய இயக்கம், 8ஆவது பகுதியின் iii பிரிவான விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள், iv விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் படிக்க வேண்டும்.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த சட்டங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் என்ன சட்டங்கள் இருந்தன? வைசிராய்களின் அதிகாரங்கள் என்ன? என்பவை குறித்து படிக்க வேண்டும்.
அதேபோல நவீன இந்தியா பகுதியில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்துப் படிக்க வேண்டும். இதையும் இந்திய - தமிழ்நாட்டு அளவில் ஒப்பிட்டுப் பார்த்துப் படிப்பது, நல்ல புரிதலுக்கு உதவும்.
இந்தப் பகுதி சற்றே விரிவானது என்பதால், அடுத்த அத்தியாயத்தில் சீர்திருத்த இயக்கங்கள் குறித்தும் அவற்றின் பணிகள் குறித்தும் பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 10: அதிக மதிப்பெண்களை அள்ளித்தரும் அறிஞர்கள் பகுதி..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com