TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 11: அடிப்படை உரிமைகள் டூ அரசு கோட்பாடுகள்.. அரசமைப்பில் மதிப்பெண்ணை அள்ளலாம்!
TNPSC exam preparation Tips: அரசமைப்புப் பகுதியை நாம் 2 வகையாகப் படிக்கலாம். ஒன்று மேலே சொன்னவாறு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்து படிக்கத் தொடங்குவது, அடுத்ததாக தினந்தோறும் செய்தித்தாளை வாசிப்பது.
பொதுத் தமிழ் பகுதியை எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம் என்பது குறித்துக் கடந்த அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, பொது அறிவு பாடப் பகுதியை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் இந்திய அரசமைப்பு பகுதியை எப்படிப் படிக்கலாம் என்று ஐயாச்சாமி ஐஏஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஐயாச்சாமி முருகன் விளக்குகிறார்.
இந்திய ஆட்சியியல் பிரிவுக்கான பாடத்திட்டம்
* இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
* குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
* ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
* கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; மத்திய - மாநில உறவுகள் .
* தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
* பொது வாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் அறியும் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்- மனித உரிமைகள் சாசனம்.
இந்திய அரசியலமைப்பில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து, சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல் வரையிலான செய்திகள் கேள்விகளாகக் கேட்கப்படலாம். குரூப் 4 தேர்வில் சுமார் 12 முதல் 16 கேள்விகள் கேட்கப்படலாம்.
எந்தவொரு பாடத்தையும் படிக்கத் தொடங்கும் முன்பு நாம் சில அடிப்படையான விசயங்களை முதலில் செய்ய வேண்டும். முதலில் சமீபத்திய வினாத்தாள்களைத் திரட்டி, அவற்றில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் விதத்தை உற்றுநோக்க வேண்டும். பின் தேர்வுக்கான பாடத்திட்டத்தை எடுத்துக்கொண்டு பாடத்திட்டத் தலைப்புகளைக் குறிப்பெடுக்க வேண்டும். அவை 6 முதல் 12 வரையுள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் அவை எங்குள்ளன என்பதைக் குறிப்பெடுத்துக்கொண்டு படிக்க வேண்டும்.
2 வகையாகப் படிக்கலாம்
அரசியலமைப்புப் பகுதியை நாம் இரண்டு வகையாகப் படிக்கலாம். ஒன்று மேலே சொன்னவாறு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்து படிக்கத் தொடங்குவது, அடுத்ததாக தினந்தோறும் செய்தித்தாளை வாசிப்பது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் எவ்வாறு குடியரசு ஆனது, அதன் அம்சங்கள் குறித்துப் பாடப்புத்தக்கத்தில் படிப்பதன் மூலம் அரசியலமைப்புப் பாடத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கமுடியும். அதேவேளையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளையும் , பிரதமரின் செயல்பாடுகளையும் நாம் பார்க்கும் போது இந்தியக் குடியரசு எவ்வாறு உண்மையில் செயல்படுகிறது என்பது புரியும். இப்போது ஒரு சந்தேகம் எழலாம். இதிலிருந்து எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்று. மத்திய அரசின் உண்மையான செயல் தலைவர் அல்லது பெயரளவிலான தலைவர் என வினாக்கள் அமையும்.
சமீபத்தில் இந்தியக் குடியரசு தினத்தன்று எல்லோரும் இந்திய அரசமைப்பின் முகவுரையைப் படித்தனர். இதிலிருந்து, முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது, முகவுரையில் உள்ள “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்“ என்ற வார்த்தைகள் எங்கிருந்து பெறப்பட்டன? முகவுரையில் 1976ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வார்த்தை என்ன என்பன போன்று வினாக்கள் கேட்கப்படலாம். ஏற்கெனவே இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில், அரசமைப்பின் முகவுரையில் உள்ள வார்த்தைளை வரிசையாக எழுதுமாறு கேட்டிருந்தது.
அடிப்படையும் நடைமுறையும்
அரசியலமைப்பின் அடிப்படையான அம்சங்களைப் பள்ளிப் புத்தகத்திலும்,அதன் நடைமுறையைச் செய்தித் தாள்களின் மூலம் இணைத்துப் படித்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடியும். உதாரணமாக அண்மையில் தமிழக சட்டசபை இயற்றிய நீட் மசோதாவைத் தமிழக ஆளுநர் திருப்பி சட்டப்பேரவைக்கே அனுப்பினார். இந்தச் செய்திகளை நீங்கள் பத்திரிக்கையில் பார்க்கும் போது ஆளுநரின் அதிகாரம் என்ன, சட்டப் பேரவையின் அதிகாரம் என்ன? ஏன் ஆளுநர் திருப்பி அனுப்பினார்? ஏன் நீட் மசோதாவிற்கு மட்டும் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்? பொதுப்பட்டியல் என்றால் என்ன? போன்ற எல்லாத் தகவல்களையும் பத்திரிக்கைகள் விளக்கமாகச் செய்தியாக வெளியிடுவதை ஆராய்ந்தும் குறிப்பெடுத்தும் படித்தால் நல்லது.
அரசியலமைப்பின் அம்சங்களைப் பொறுத்தவரை இந்திய அரசமைப்பு கூட்டாட்சிக் கூறுகளைக் கொண்டதா? அல்லது ஒற்றையாட்சிக் கூறுகளைக் கொண்ட நாடா என்பது போன்ற கேள்வியும். அரசமைப்பின் அடிப்படை அம்சம் என்ற கோட்பாடு எந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
ஒன்றியம், மாநிலம், யூனியன் பிரதேசங்கள் பகுதியைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் 1-ன் படி இந்தியா என்பது மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சியா என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதேபோல புதிய மாநிலங்கள் உருவாக்கம், மாநிலம் இரண்டாகப் பிரிப்பு அல்லது பெயர் மாற்றம் செய்யும் நடைமுறைகள் தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கா, மாநிலச் சட்டமன்றத்துக்கா என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்படலாம்.
குடியுரிமை, அடிப்படை உரிமைகள்
குடியுரிமை பகுதியில் அது தொடர்பான அரசமைப்பு விதிகளும் , குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கூறுகள் தொடர்பாகவும் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. பொதுவாக அடிப்படை உரிமைகள் குறித்த கேள்வி இல்லாத வினாத்தாளே இருக்காது. அடிப்படை உரிமைகளைப் பொறுத்தவரை அவற்றின் வகைகள், முழுமையான அடிப்படை உரிமைகள் மற்றும் விதி 21 போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதேபோல அரசமைப்பின் ஆன்மாவாகக் கருதப்படும் விதி 32இன் கீழ் வரும் பல்வேறு நீதிப் பேராணைகள் பற்றிய கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும்.
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அரசமைப்பின் விதிகள் எவ்வாறு செயலாக்கம் பெறுகின்றன என்பது பற்றிய கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. உதாரணமாக அரசமைப்பு விதி 40-ன்படி கிராமப் பஞ்சாயத்தின் செயலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு தொடர்பான விதிகள் தொடர்ச்சியாகக் கேட்கப்படுகின்றன. மொத்த அடிப்படைக் கடமைகள் எத்தனை? எந்த ஆண்டு அடிப்படைக் கடமைகள் அரசமைப்பில் சேர்க்கப்பட்டது? எந்தக் குழுவால் கடமைகள் பரிந்துரை செய்யப்பட்டன? என்பன போன்ற வினாக்கள் கேட்கப்படும்.
மத்திய - மாநில அரசுகளைப் பொறுத்தவரை, சட்டமன்றம் மற்றும் செயலாட்சித் துறைக்குமான உறவு, பிரதமர், ஆளுநர், அமைச்சரவைக் குழு, குடியரசுத் தலைவருக்குமான உறவு போன்றவற்றைப் படிக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்கபடும் மரபுகள், பூஜ்ய நேரம், கேள்வி நேரம் தொடர்பான பாடங்கள் முக்கியமானவை. மக்களவை- மாநிலங்களவைக்கு இடையே உள்ள உறவு மற்றும் அதிகாரம், சபாநாயகரின் நிலை, மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு , சட்டமியற்றுதல் தொடர்புடைய நடைமுறைகள் போன்றவை கேள்விகளாகக் கேட்கப்படலாம்.
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்
கூட்டாட்சி என்பது மத்திய - மாநில உறவுகள்தான். எனவே மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்ட, நிதி மற்றும் நிர்வாக உறவு தொடர்பான பாடங்களைத் தவறாமல் படிக்க வேண்டும். மத்திய- மாநில உறவில் அரசமைப்பு ரீதியில் காலங்காலமாகப் பிரச்சினைகள் உள்ள நீர்ப் பங்கீட்டுத் தகராறு, ஆளுநர் நியமனம், விதி 356ஐப் பயன்படுத்துதல், மத்திய மாநில உறவுக்கான குழுக்களின் அமைப்பு, பரிந்துரை போன்ற தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும்.
நீதித்துறையைப் பொறுத்தமட்டில் உச்ச மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு , அமைப்பு நீதிபதிகள் நியமனம் போன்றவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படலாம். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை எந்த ஆண்டு பல உறுப்பினர் கொண்ட ஆணையமாக மாறியது, எவற்றிற்கெல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரம் உண்டு, வயது வந்தோருக்கான வாக்குரிமை, தேர்தல் சீர்திருத்தங்கள் போன்ற தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்.
ஊழல், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக் ஆயுக்தா போன்ற பகுதிகளில் அது தொடர்பான கமிட்டிகளின் பரிந்துரைகள், சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு, அந்த அமைப்பின் தலைவர்களை நியமனம் செய்யும் முறை, தலைவர்கள், உறுப்பினர்களின் பதவிக் காலம் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம்.
இறுதியாக அரசியலமைப்புப் பகுதியில் நாம் முழு மதிப்பெண்களைப் பெற பள்ளி பாடப் புத்தகத்தைப் படித்து, பழைய வினாத்தாள்களைப் பயிற்சி செய்ய வேண்டும். கூடுதலாக தினந்தோறும் செய்தித்தாள்களை முழுமையாக வாசித்தால் போதும். எந்தக் கேள்விக்கும் எளிமையாக பதிலளிக்கலாம்.
அரசியலமைப்புப் பகுதி சரி, அடுத்தடுத்த பகுதிகளைப் படிப்பது எப்படி?
- பார்க்கலாம்...
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 10: அதிக மதிப்பெண்களை அள்ளித்தரும் அறிஞர்கள் பகுதி..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com