Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

Donald Trump: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதியை ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து அதிபர் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு:
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகைய்ல் இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த, 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய 78 வயதான ட்ரம்ப், 'உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று' என்றும் 'அதிக பணம்' இந்தியாவிடம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் சொன்னது என்ன?
அதன்படி, “நாம் ஏன் இந்தியாவிற்கு 21 மில்லியன் டாலர்களை வழங்குகிறோம்? அவர்களிடம் அதிக பணம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு செல்வது அரிது. இந்தியா மீதும் அதன் பிரதமர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அதற்காக அவர்கள் நாட்டில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாம் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டுமா?" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்:
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் DOGE அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”அமெரிக்காவின் வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்படும், பின்வரும் திட்டங்கள் அனைத்தும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பட்டியலில் உள்ள திட்டங்களில் ஒன்று 'தேர்தல்கள் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்தலுக்கான கூட்டமைப்பிற்கு $486 மில்லியன்', இதில் மால்டோவாவில் "உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு அரசியல் செயல்முறைக்கு" $22 மில்லியன் மற்றும் இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவிற்கு $21 மில்லியன் ஆகியவை அடங்கும்.
இதுதொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க $21 மில்லியன்? இது நிச்சயமாக இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் வெளிநாடுகளின் தலையீடு. இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஆளும் கட்சிக்கு அல்ல” என குறிப்பிட்டு இருந்தார்
நண்பரும் வரியும்:
அதிபர் டிரம்ப் சமீபத்தில் பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் வர்த்தகம், வரிகள், குடியேற்றம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதித்தனர். மேலும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் குறித்தும் பேசினர். ஆனாலும், இந்தியாவால் விதிக்கப்படும் வரிகளுக்கு நிகராக, அமெரிக்காவும் வரி விதிக்கும் என ட்ரம்ப் திட்டவட்டமாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

