Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வரும் ஜுன் மாதம் முதல் பரங்கிமலை வரை விரிவுப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள், புதிய சாலைகள் ஆகியவற்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகளும் இயங்கி வருகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை:
சென்னையில் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முக்கிய போக்குவரத்து சேவையாக திகழ்வ்து மின்சார ரயில். தற்போது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரையிலும், சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கடந்த 2008ம் ஆண்டே சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை பரங்கிமலை வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது. ஆதம்பாக்கம், தில்லைநகர், கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தொடங்கியது ரயில் பாதை அமைக்கும் பணிகள்:
பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நிலம் கையகப்படுத்தப்பட்டு 2022ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. 5 கி.மீட்டர் தொலைவிற்கு இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேம்பால பணிகள் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே வரை 5 கி.மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ரூபாய் 495 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. மொத்தம் 4.5 கி.மீட்டர் தொலைவிற்கு மொத்தம் 167 தூண்கள் இந்த பறக்கும் ரயில் பாதைக்காக கட்டப்பட்டுள்ளது.
ஜுன் முதல் பறக்கும் ரயில்:
தற்போது 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் வரும் ஜுன் மாதத்திற்குள் முழு பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வரும் ஜுன் மாதம் முதல் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் செயலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பாதையில் மின்சார ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு இந்த பகுதியில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னையில் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் சென்னையின் உள்ளே பணிகளுக்கு வருவதற்கும், கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வருவதற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க மின்சார ரயில் மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

