2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்திருந்தது. அந்த அணியில் லாரன்ஸ் 67* ரன்களுடனும், மார்க் வூட் 16* ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. அப்போது மார்க் வூட்- லாரன்ஸ் ஜோடி சற்று நிதனாமாக ரன் எடுக்க தொடங்கியது. 41 ரன்கள் எடுத்திருந்தப் போது ஹென்ரி பந்துவீச்சில் மார்க் வூட் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த பிராட் நான்கு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆண்டர்சென் 4 ரன்களுடன் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 303 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டேன் லாரன்ஸ் 81 ரன்களுடன் இருந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக லாரன்ஸ் 81*, பேர்ன்ஸ் 81, மார்க் வூட் 41 ஆகியோர் ரன்கள் அடித்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சிறப்பாக பந்துவீசிய போல்ட் 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும் மேட் ஹென்ரி 3 விக்கெட்களையும், அஜேஸ் பட்டேல் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதன்பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் டாம் லேத்தம் மற்றும் டேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
அதில் 6 ரன்களுடன் கேப்டன் டாம் லேத்தம் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வில்லியம்சனிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த வில் யங் கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கான்வே இப்போட்டியிலும் அரைசதம் கடந்தார். மீண்டும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் ராஸ் டெய்லர் மற்றும் யங் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய வில் யங்கும் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் ஆட்டத்தின் 77ஆவது ஓவரை வீசிய டேன் லாரன்ஸ் மூன்றாவது பந்தில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டையும் பெற்றார். 82 ரன்களுடன் வில் யங் பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டமும் முடிவிற்கு வந்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46* ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மேலும் படிக்க:பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத்