Asia Cup: ஆசிய கோப்பைக்காக அணியை கலைத்து போடும் பிசிசிஐ - பும்ரா இன்? கில்லுக்கு கல்தா? புதிய துணை கேப்டன்
Asia Cup 2025 ICT: ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Asia Cup 2025 ICT: ஆசிய கோப்பை போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர், ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவார் என கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2025:
இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20 - எடிஷன்), அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களை வரும் 19 அல்லது 20ம் தேதி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்ய உள்ளது. அனைத்து வீரர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதகாவும், அது கிடைத்ததுமே இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் எதிர்பாராத பல மாற்றங்களை செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். சிக்கலானதாக இருந்தாலும், சாதகமான முடிவுகளை அளித்த சூழல்களை கொண்டு சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கில்லுக்கு கல்தா?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு தனது தலைமைத்துவத்தை சுப்மன் கில் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது, கில் தான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்து சொதப்பியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, கடைசியாக உள்ளூரில் இந்தியா விளையாடிய டி20 தொடரில், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார். அந்த கலவை வெற்றியை கொடுத்ததால் எந்த மாற்றமும் செய்யாமல், அக்சர் படேல் தொடர்ந்து துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிய கோப்பையில் பும்ரா?
ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான, டெஸ்ட் தொடர்களுக்கு தயாராகும் விதமாக ஆசிய கோப்பையில் பும்ரா விளையாடமாட்டார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆசிய கோப்பைக்கான அணியில் பும்ரா இடம்பெறுவார் என்றும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டாப் ஆர்டரில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வார்கள் என கூறப்படுகிறது. அபிஷேக் அண்மையில் உலக டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்த, கடைசியாக விளையாடிய போட்டிகளில் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலுமே சஞ்சு சாம்சன் அசத்தி இருந்தார். இதனால், சுப்மன் கில்லுக்கான இடம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும், ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தேர்வுக்குழு பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது. இதன் விளைவாகவே ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷனுக்கான வாய்ப்பு என்பது மறுக்கப்படலாம். குறிப்பாக, நட்சத்திர வீரரான கே.எக்ல். ராகுலுக்கு கூட வாய்ப்பு கிடைக்காத சூழல் நிலவுகிறதாம். இவர் ஒருநாள் போட்டிகளில் அணியின் பிரதான விக்கெட் கீப்பராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று விக்கெட் கீப்பர்
சஞ்சு சாம்சனை தொடர்ந்து மாற்று விக்கெட் கீப்பருக்கான பரிசீலனையில் ஜிதேஷ் சர்மா மற்றும் த்ருவ் ஜுரெல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இந்தியா விளையாடிய கடைசி டி20 தொடரில் ஜுரெல் பங்கேற்று இருந்தார். அதேநேரம், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி ஜிதேஷ் கவனம் ஈர்த்து இருந்தார். ஃபினிஷராகவும் திறம்பட செயல்பட்டு இருந்தார்.
ஆல்-ரவுண்டர்கள் யார்?
ஷார்ட் ஃபார்மெட்களில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா திகழ்கிறார். அவரை தொடர்ந்து, பரிசீலனையில் இருந்த நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, கடந்த இங்கிலாந்து டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் துபே அணியில் இடம்பெறலாம். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புகள் உறுதியாகியுள்ளன.
வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் இடம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அவர்களுக்கு பக்க பலமாக செயல்படப்போகும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது. இதில் கடந்த ஐபிஎல் போட்டியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஷித் கிருஷ்ணாவிற்கும், கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் உத்தேச அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கே.), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, த்ருவ் ஜூரல்




















