பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
திருப்பூரில் அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது உடுமலைப்பேட்டை. இங்கு அமைந்துள்ளது குடிமங்கலம். இந்த குடிமங்கலத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல்.
அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் தகராறு:
குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சிக்கனூத்து பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ஆகிய 3 பேர் தங்கி தோட்டத்தை பராமரித்து வந்தனர்.
இன்று அதிகாலை தோட்டத்தில் பணியாற்றி வந்த மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து அவர்களது தந்தையை தாக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் ஒருவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை:
அங்கு தகராறில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் கண்டித்துள்ளார். அப்போது, அவர் மீது ஆத்திரப்பட்ட தந்தையை தாக்கிக் கொண்டிருந்த மகன்கள் இரண்டு பேரும் அருகே இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலையாளிகளும் அவர்களது தந்தையும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். பின்னர், சண்முக சுந்தரத்துடன் உடன் சென்ற காவலர் அளித்த தகவலின்படி போலீசாரும், உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பெரும் அச்சம்:
அவர்கள் சண்முகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.





















