IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அஷ்வின் மட்டுமின்றி பல முன்னணி வீரர்களையும் வெளியேற்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாம்.

IPL CSK: ஐபிஎல் மினி ஏலத்தில் 40 கோடி ரூபாய் ரொக்கத்துடன் களமிறங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்புடென்னை காலியாக்கும் சிஎஸ்கே:
மெகா ஏலத்தை தொடர்ந்து நடைபெற்ற நடப்பாண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. இதன் விளைவாக அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் மற்றும் டெவால்ட் ப்ராவிஸ் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நம்பிக்கை அளித்தாலும், முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் ஏமாற்றத்தையே அளித்தனர். இதனால் அவர்களை வெளியேற்றிவிட்டு வெற்றியை ஈட்டித் தரக்கூடிய புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆட்வம் காட்டுகிறதாம்.
பர்ஸை நிரப்ப திட்டம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணிக்கு திரும்பிய அஷ்வின் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இந்நிலையில் தான் மினி ஏலத்திற்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்கும்படி, அஷ்வினே கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் சென்னை அணிக்கு ரூ.7.5 கோடி நிதி மிச்சமாகும். இதேபோன்று 2025 சீசனில் சொதப்பிய டெவோன் கான்வே (ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.3.4 கோடி), சாம் கரன் (ரூ.2.4 கோடி), குர்ஜப்னித் சிங் (ரூ.2.2 கோடி), நாதன் எல்லீஸ் (ரூ.2 கோடி), தீபக் ஹூடா (ரூ.1.75 கோடி), ஜேமி ஒவர்டன் (ரூ.1.5 கோடி) மற்றும் விஜய் சங்கர் (ரூ.1.2 கோடி) ஆகியோரையும் கழற்றிவிட சென்னை அணி முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் சென்னை அணிக்கு 34.45 கோடி ரூபாய் நிதி கிடைக்கும். ஏற்கனவே கைவசம் இருக்கும் தொகையுடன் சேர்த்து, சுமார் 40 கோடியுடன் சென்னை அணி மினி ஏலத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாம்.
அன்புடென்னின் இலக்கு:
நடப்பு தொடரில் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இல்லாததும், எதிர்பார்த்த வீரர்கள் அதிரடியாக ஆடாததும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக மாறியது. மிடில் ஆர்டர் என்பதே இல்லாததை போன்று காட்சியளித்தது. எனவே, மினி ஏலம் மூலம் வலுவான டாப் ஆர்டர், இந்தியர்களை உள்ளடக்கிய மிடில் ஆர்டர் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்களை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன்?
இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிலிருந்து விலக உள்ளதாகவும், சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஏலத்திற்கு முன்பாக ட்ரேட் அடிப்படையில் சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்குவது எளிதாக தெரியவில்லை. காரணம் நட்சத்திர வீரர்களாக உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, பதீரனா மற்றும் ஷிவம் துபே ஆகிய நட்சத்திர வீரர்களில் யாரேனும் ஒருவரை வெளியேற்றவும் அணி நிர்வாகம் தயாராக இல்லையாம். ஒருவேளை கேஷ்-ஒன்லி ஆப்ஷனை ராஜஸ்தான் ஏற்றால் இந்த வீரர் பரிமாற்றம் எளிதாகலாம். அதேநேரம், சாம்சனுக்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை குறைக்க, சென்னையின் எந்தவொரு வீரரையும் ஏற்கா ராஜஸ்தான் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சஞ்சு சாம்சனின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதுபோக ஏலத்தில் கேமரூன் க்ரீன், மிட்செல் ஓவன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய ஆல்-ரவுண்டர்களையும் சென்னை குறிவைக்கிறதாம்.
தோனி விளையாடுவது உறுதி?
2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. செப்டம்பர் மாதத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. வலுவான பிளேயிங் லெவன் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற அணியை கட்டமைக்க, ஆலோசகராக செயல்படும் வகையில் தோனி அணியில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.




















