"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததே அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கு காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் 208 அரசுப்பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை இல்லை:
அவர் அளித்துள்ள விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 824 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.21 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். 5 லட்சத்து 34 ஆயிரத்து 799 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என மொத்தம் 1204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.
குழந்தை பிறப்பு விகித சரிவே காரணம்:
சுயநிதி பள்ளிகளில் 72 சதவீதமும், இதர பள்ளிகளில் 28 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதற்கு அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணம் அல்ல.
2011ம் ஆண்டு 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. 2016ல் 10 லட்சத்து 45 ஆயிரமாக குறைந்தது. அடுத்தாண்டில் இது 8.78 லட்சமாக குறையும் என 2020ல் வெளியான மக்கள்தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்:
கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லை. கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளியில் படித்த நான்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் இடம்பெயர்ந்தனர். இவர்களில் 3 மாணவர்கள் எல்லை மேட்டுப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மற்றொரு மாணவி சின்னதாராபுரம் ஆர்சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் படிக்கின்றனர். இதனால், யாரும் இடைநிற்றலில் இல்லை.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதால் பெற்றோர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதாலும் கிராமப்புறங்களில் சேர்க்கை குறைகிறது. பல்வேறு நலத்திடட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசு தெரிவித்துள்ளது போல தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது. மேலும், சமீபகாலமாக கிராமப்புறங்கள் உள்பட பல பகுதிகளிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். அரசு தரப்பில் காரணங்கள் எது கூறினாலும் பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தரத்தை உயர்த்த வேண்டும்:
ஆங்கில மொழித் திறனுக்காகவே பல பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதனால், அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்றாற்போல பயிற்சிகள் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு தரமானதாக இருந்தாலும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





















