Yasir Arafat on MS Dhoni : பாகிஸ்தான் அணிக்கு தோனியை கேப்டனாக தேர்வு செய்திருப்பேன் : யாசிர் அராஃபத்
பாகிஸ்தான் வீரர்கள் திறமையானவர்கள், ஆனால் அவர்களுக்கு தோனி போன்ற குணங்கள் கொண்ட ஒரு கேப்டன் தேவை : யாசிர் அராபத்!
தற்போது பாஸ்கிதான் அணி பாபர் அசாம் தலைமையில் விளையாடி வருகிறது. ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு தோனி போன்ற ஒரு புகழ்பெற்ற வீரர்களை கவர்ந்திழுக்கும் தலைவர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாசிர் அராஃபத் கருத்து தெரிவித்திருக்கிறார். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கண்டிராத சிறந்த கேப்டன் தோனி என்பதை மறுப்பதற்கில்லை. உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கிரிக்கெட் வீரராகவும் தோனி திகழ்கிறார். கிரிக்கெட்டில் அவர் விளையாடிய காலத்தில் இருந்த கோப்பைகள் அனைத்தையும் வென்ற ஒரே கேப்டனாகவும் சர்வதேச அளவில் தோனி இருந்து வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற யாசிர் அராஃபத் இந்தியா அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் தோனி என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் தோனியை பாகிஸ்தான் லெவன் அணிக்கு கேப்டனாக சேர்த்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் யாசிர் அராஃபத் அளித்துள்ள பேட்டியில் "தோனி இப்போது விளையாடவில்லை ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் ஒருவேலை அவர் ஓய்வு பெறாவிட்டால், நான் அவரை பாகிஸ்தான் லெவன் அணியில் கேப்டனாக அழைத்துச் வந்திருப்பேன். தற்போதைய பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக நிர்வகிக்க தோனி போன்ற ஒருவர் தேவை. பாகிஸ்தான் வீரர்கள் திறமையானவர்கள், ஆனால் அவர்களுக்கு தோனி போன்ற குணங்கள் கொண்ட ஒரு கேப்டன் தேவை" என தெரிவித்துள்ளார்.
மேலும் அறிய : ”தோனியின் நட்பால்தான் எனக்கு அணியில் இடம் கிடைத்தது” : வருத்தத்தில் சுரேஷ் ரெய்னா!
2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியில் யாசர் அராஃபத் விளையாடியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கும் தோனிக்கும் இடையே நடந்த ஒரு மோதல் குறித்தும் யாசர் அராஃபத் தெரிவித்துள்ளார்.
"தோனிக்கு எதிராக சோயிப் அக்தர் பந்து வீசும் போதெல்லாம், தோனியை எப்படி வீழ்த்துவது என்பது அவருக்கு புரிபடவில்லை. தோனி எவ்வாறு அவரை அடிப்பார் என்பதும் ஒருபோதும் தெரியாது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர் தோனி. 90-களில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் பிறகு ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 50-க்கும் அதிகமாக கொண்ட வீரர்கள் யாரும் தோனியை தவிர உலகில் தற்போது இல்லை. தோனி போன்று ஃபினிஷிங் செய்ய அவர் அருகாமையில் செல்ல கூட நபர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை” என்று அராஃபத் கூறியுள்ளார்.