Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli ODI Retire: ஒருநாள் போட்டிகளில் இருந்து இந்திய நட்சத்திர வீரர்களான கோலி மற்றும் ரோகித் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohit Kohli ODI Retire: இந்திய நட்சத்திர வீரர்களான கோலி மற்றும் ரோகித், 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கோலி, ரோகித் ஓய்வு?
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்திய அணிக்கான அடுத்த போட்டிகளுக்கு இன்னும் ஒருமாத கால அவகாசம் உள்ளது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவில் எதிர்காலம் தொடர்பான பல தகவல்கள் மற்றும் வதந்திகள் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஓய்வு பெறாமல் உள்ள, முன்னணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று, வரலாற்று சிறப்புடன் ஓய்வு பெற இரண்டு வீரர்களுமே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா தொடரே கடைசி?
ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின்படி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் தொடரே, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி தொடராக இருக்கக் கூடும். அந்த தொடருடன் இருவருமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலுமாக ஓய்வு அறிவிக்கலாம். பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, ”ஒருவேளை இருவருமே 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளில் விளையாட வேண்டும் என தீர்க்கமாக இருந்தால், அவர்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே ட்ராபியில் பங்கேற்க வேண்டும்” என கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்பாகவும், இந்திய வீரர்களை ரஞ்சி போட்டிகளில் விளையாட பிசிசிஐ அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்திற்கான திட்டம்:
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தாண்டி செல்வதற்கு, வெள்ளை பந்து போட்டிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் இளம் திறமையாளர்களின் எண்ணிக்கையே காரணமாக கூறப்படுகிறது. இருவரும் 40 வயதை நெருங்குவதும் மற்றொரு காரணமாக உள்ளது. பிசிசிஐ நிர்வாகக் குழுவும், தேர்வாளர்கள் குழுவும் 2027ம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிகிறது. பார்டர் - கவாஸ்கர் தொடரில் சொதப்பியதை தொடர்ந்து ரஞ்சி போட்டியில் தங்கள் அணிகளுக்காக விளையாடினாலும், இங்கிலாந்து தொடருக்கு முன்பே கோலி மற்றும் ரோகித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அந்த ஃபார்மெட்டிலிருந்தும் இருவரும் ஓய்வு அறிவித்திருந்தனர்.
ஹீரோக்களுக்கு ஃபேர்வெல் கூட இல்லையா?
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் 3 போட்டிகள் அடங்கிய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆகும். அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடரின் போட்டிகள் பெர்த், அடிலெய்ட் மற்றும் சிட்னியில் நடைபெற உள்ளன. ஒருவேளை அந்த தொடருடன் கோலி மற்று ரோகித் ஓய்வு பெற்றால், அணியை சுமார் இரண்டு தசாபதங்களாக தங்களது தோளில் சுமந்த ஹீரோக்களுக்கு பிரியா விடை கொடுக்கும் வாய்ப்பு கூட உள்ளூர் ரசிகர்களுக்கு கிடைக்காது.
அதேநேரம், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ளது. ஒருவேளை கோலி மற்றும் ரோகித் ஓய்வு பெறுவது உறுதியாகிவிட்டால், குறைந்தபட்சம் தென்னாப்ரிக்கா தொடரிலாவது பங்கேற்கச் செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2026 ஒருநாள் தொடர்கள்:
2026 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒருநாள் போட்டி அட்டவணையில் நியூசிலாந்து (ஜனவரி), ஆப்கானிஸ்தான் (ஜூன்), இங்கிலாந்து (ஜூலை), மேற்கிந்திய தீவுகள் (செப்டம்பர்) மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான மற்றொரு தொடர் (அக்டோபர்) ஆகியவை அடங்கும். தகவல்களின்படி ரோகித் சர்மா ஓய்வு பெற்றால், அவரது இடத்தில் இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக கில் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக தன்னை நிரூபித்ததால், கில்லுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கக் கூடும்.




















