State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
TN State Education Policy: சிறப்பான நலத்திட்டங்கள், கற்றல் திட்டங்களில் சமவாய்ப்பளித்தல் மற்றும்அணுக்கத்தினை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழிமுறையாகும். இது வெற்று மறு கட்டமைக்கப்பட்ட ஆவணம் இல்லை.

மாநிலக் கல்விக் கொள்கை மீதான பிறரின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
- கொள்கை வடிவமைப்பின் அடிப்படை நோக்குகளை மீறல்
விளக்கம்:
மாநிலக் கல்விக் கொள்கை 2025-ஆனது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள், பாடத்திட்ட நிபுணர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாநிலக் கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய உயர் நிலை நிபுணர் குழுவால் உருவாக்கப்பட்டது. இந்தக் குழு, ஆசிரியர்கள், குழந்தைகள் உரிமை அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs), பெற்றோர் சங்கங்கள் ஆகியோருடன் ஆலோசனைகள் நடத்தியது. மாநிலக் கல்விக் கொள்கை 2025 இல், “இந்தக் கொள்கை மாற்றங்களுக்கேற்ப திருத்தக்கூடிய வகையில் ‘உயிர்ப்புடன் இருக்கும் ஆவணம் ஆகும். பொதுக் கருத்துகள் அனைத்து தரப்பிலும் இடையறாத முறையில் சேர்க்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கொள்கை வரைவானது தொடர்ச்சியாக நேரிடும்.
- தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கொள்கையாக இல்லை
விளக்கம்:
மாநிலக் கல்விக் கொள்கை 2025, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) முன்வைத்த மூன்றுமொழிக் கொள்கையை நிராகரிக்கிறது. மேலும், உயர் கல்வி சேர்க்கைக்கான மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையான சமூகநீதி வரலாற்றை ஆழமாக வலியுறுத்துகிறது. மதிய உணவுத் திட்டம், விலையில்லாப் பாடப்புத்தகங்கள்/சீருடைகள் வழங்குதல், பின் தங்கிய மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி போன்றவற்றை வழங்குவதை முனைப்புடன் செயல்படுத்துகிறது.
மேலும், இது உள்ளூர் சமூக-கலாச்சார சூழலை கொள்கை இலக்குகளில் ஒருங்கிணைக்கிறது: "கல்வி என்பது தமிழ் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் உலகளாவிய ஈடுபாட்டிற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.”
3 & 4. தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மறுகட்டமைத்தல் மற்றும் திட்டங்களை பரிந்துரைகளாக மாற்றுதல்
விளக்கம்:
சிறப்பான நலத்திட்டங்கள், கற்றல் திட்டங்களில் சமவாய்ப்பளித்தல் மற்றும்அணுக்கத்தினை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழிமுறையாகும். இது வெற்று மறு கட்டமைக்கப்பட்ட ஆவணம் இல்லை.
மாநிலக் கல்விக் கொள்கை 2025 இல் உள்ள புதுமைகள்:
Ø எண்ணும் எழுத்தும் இயக்கத்தினை ஒன்றாம் வகுப்பிற்கான ஆயத்த நிலைக்கு நீட்டித்தல்
Ø செறிவூட்டப்பட்ட தொழிற்கல்வி கலைத்திட்டம், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை உள்ளகப் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
Ø பள்ளியில் எண்ணிம (Digital) உள்கட்டமைப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணைய வழி ஆசிரியர் வளத்தளங்களோடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இக்கொள்கை இலக்கு மட்டும் ஒருங்கிணைத்தலை மேம்படுத்துவதுடன் நிரூபிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளை வலியுறுத்திகிறது.
- தனித்துவமான முதன்மை தொலைநோக்கினை வளர்ப்பதில் தோல்வியடைந்துள்ளது
விளக்கம்:
தேவையான தொலைநோக்கு: ஒவ்வொரு குழந்தையின் திறமைகளை வளர்த்து, மாணவர்களை 21ஆம் நூற்றாண்டிற்கு திறன் மிக்கமானவர்களாக்கி வளர்ந்து வரும் உலகில் பரிவுள்ள, நம்பிக்கையுள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்தல். கூர் சிந்தனை, படைப்பாற்றல், பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருதல் ஆகிய திறன்களை வளர்க்கும் முதன்மையான முன்னெடுப்புகள் உள்ளன. இவை தமிழ்நாட்டின் பண்பாட்டு மற்றும் மொழிசார் தொன்மை ஆகியவற்றை மதித்து எதிர்காலத்திற்கு தயாராகும் திறன்களோடு ஒத்துப் போகின்றன.
6 & 7. செயலிகள் தளங்கள் வாயிலாக அதீத மையப்படுத்துதல்
விளக்கம்:
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS), TN-SPARK, பள்ளி பார்வை ஆகிய எண்ணியத் தளங்கள் தரவுகள் மேலாண்மை மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட கருவிகளாகும். ஆனால் இவை ஆசிரியர் வகுப்பறை சுதந்திரத்திற்கு மாற்று அல்ல. மாநிலக் கல்விக் கொள்கை 2025, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் உள்ளூர் முடிவெடுத்தலை வலுப்படுத்துகிறது. இது சூழலுக்கேற்ற கற்பித்தல் முறையினை மேம்படுத்துகிறது. வேறுபட்ட கற்போர் தேவைகளுக்கேற்ற வகுப்பறை செயல்பாடுகள், ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு மூலம் ஆசிரியர்கள் திறன் மிக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
- தேசிய கல்விக் கொள்கை 2020ஐ பிரதிபலித்தல்
விளக்கம்:
தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை 2025 வெளிப்படையாக மறுக்கிறது. 10 + 2 அமைப்பினையும், மாநில கலைத்திட்ட கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து தக்க வைத்துள்ளது. நலத்திட்டங்கள் மற்றும் சமூக நீதி ஆகியன தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இவை மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளாகும்.
- சமவாய்ப்பளித்தல், பன்முகத்தன்மை, சமூக நீதி ஆகியன பாதிப்பிற்குள்ளாகி உள்ளது
விளக்கம்:
சாதகமான மாணவர்-ஆசிரியர் விகிதத்தினை அடைய ஆசிரியர் நியமனத்தை இக்கொள்கை வலுப்படுத்துகிறது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் அதிகமாக உள்ள மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பினை முதன்மைப்படுத்தி, உள்ளடங்கிய வகுப்பறை வளங்களை மேம்படுத்துகிறது. குறைவான மொத்த சேர்க்கை வீதம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, விளிம்பு நிலைப் பிரிவினர்களிடையே சேர்க்கை இடைவெளிகள் குறைக்கப்படுவதை வலியுறுத்துகிறது.
10 & 11. தனியார் மயமாதலை ஊக்குவிக்கிறது மற்றும் நிதி தொடர்பான உறுதிபாடின்மை
விளக்கம்:
மாநிலக் கல்விக் கொள்கை 2025, பொதுக் கல்வியை முதுகெலும்பாக வலியுறுத்தி, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுதலுக்கு அறைகூவல் விடுக்கிறது - தனியார் மயமாதலுக்கு எதிரானது. சமுதாய/ நிறுவன சமூகப் பொறுப்புணர்வு, ஈடுபாடு ஒரு கூடுதல் செயல்பாடு மட்டுமே. இது மாநில நிதியளித்தலுக்கு மாற்றல்ல. நிதி சார்ந்த குறிப்புகள், வரவுள்ள செயல் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்ட கட்டமைப்பில் நெகிழ்வுத் தன்மை மற்றும் அக்கறை ஆகியன இடம்பெற்றுள்ளன.
12 & 13. சாதிய சமநிலை இன்மையை புறக்கணிக்கிறது. வேறுபட்ட பணிகளுக்கு மாறுதலுக்கான எந்த திட்டமும் இடம்பெறவில்லை.
விளக்கம்:
மாநில கல்விக் கொள்கை 2025இல் சாதிய பிரிவுகளில் மொத்த சேர்க்கை வீதம் மற்றும் இடைநிற்றல் வீதத்தை வெளிப்படையாகக் கூறி, வேறுபாடுகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடை வினைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்துதல் ஆகியன இடம்பெற்றுள்ளன. தொழிற்கல்வி, வளர்ந்து வரும் தொழிற்சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பணிகள், தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு பணி வாய்ப்புகளிக்கான பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- சிறுபான்மையோர் கல்வி உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை
விளக்கம்:
இரு மொழிக் கொள்கை சிறுபான்மையோர் மொழி உரிமைகளை பாதுகாக்கிறது. மதச்சார்பின்மை, மாநிலக் கல்வியில் பொதிந்துள்ள அரசியலமைப்பு விழுமியமாகும். மாநில கல்விக் கொள்கை 2025 எந்த ஒரு பகுதியும் சிறுபான்மையினர் பாதுகாப்பினை குறைக்கவில்லை. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினர்களிடம் உள்ள கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி உதவி மற்றும் குறைதீர் கற்றல் ஆகியவற்றை வழங்கி உள்ளடங்கிய நிலையினை மாநில கல்விக் கொள்கை 2025 உறுதி செய்கிறது.
- இக்கொள்கையை திரும்பப் பெறப்பட வேண்டும்
விளக்கம்:
மாநில கல்விக் கொள்கை 2025, மாநிலம் சார்ந்த உள்ளடங்கிய மையப்படுத்துதலுக்கு எதிரான கல்விக் கட்டமைப்பாகும். இது தமிழ்நாட்டின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயார் செய்கிறது. இது சிறந்த உலக நடைமுறைகளின் வழியில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட, அளவிடப்படும் செயல் திட்டங்களினால் வளர்க்கப்பட்ட வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
முடிவுரை
மொத்தத்தில் மாநிலக் கல்விக் கொள்கை 2025 மாநில சுயாட்சியினை நிலை நிறுத்தி, சமூக நீதியினை வலுப்படுத்தி, நலத்திட்டங்களை மேம்படுத்தி, எதிர்காலத்திற்கான கலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, இதன் ’உயிர்ப்பு ஆவணம்’ அணுகுமுறை மூலம் நெகிழ்வுத் தன்மையினை உறுதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















