’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
காரணம் சொன்ன மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 13), 32ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை வேந்தர் சந்திரசேகர், உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டார். எனினும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொள்ளவில்லை.
ஆளுநர் அழைப்பை நிராகரித்த மாணவி
இந்த நிகழ்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்தார். தொடர்ந்து துணை வேந்தர் சந்திரசேகரிடம் மாணவி பட்டத்தைக் கொடுத்து பெற்றுக் கொண்டார்.
ஆளுநர் அருகில் வந்து நிற்கும்படி கோரிக்கை விடுத்தும், அவரின் அழைப்பை ஜீன் ஜோசப் நிராகரித்தார். இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகப் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பிரமுகரின் மனைவி
தொடர்ந்து, ‘’திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவள் நான்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஜீன் ஜோசப், தனது கணவர் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் ஆக உள்ளார் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காரணம் சொன்ன மாணவி ஜீன் ஜோசப், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அதனாலேயே அவரிடம் பட்டம் பெறவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.






















